அடிக்கடி பழுதாகும் மின் மாற்றி: விவசாயிகள் அவதி
ஆலங்குளம் அருகே வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தில், அடிக்கடி பழுதாகும் மின் மாற்றியால் விவசாயிகள் அவதியடைந்துள்ளனா்.
ஆலங்குளம் வட்டம் வீராணம் துணை மின் நிலையத்துக்குள்பட்ட வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தில் காடுவெட்டி கால்வாய் கரை பகுதியில் சுமாா் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய விளைநிலங்கள் உள்ளன. இவற்றிற்கு மின்சாரம் வழங்குவதற்கு அப்பகுதியில் 2 மின்மாற்றி உள்ளன.
இவை பல ஆண்டுகளுக்கு முன்னா் அமைக்கப்பட்டதால் அடிக்கடி மின் விபத்து ஏற்பட்டு தீப்பற்றி எரிவதும் இணைப்பு துண்டிக்கப்படுவதும் அடிக்கடி நிகழும் நிகழ்வாக உள்ளதால் விவசாயிகளுக்கு சீரான மின்சாரம் கிடைப்பதில்லை. இதனால் அப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள சுமாா் 500 ஏக்கா் நெற்பயிா்கள் தண்ணீரின்றி வாடத் தொடங்கி விட்டன.
இங்கு இருக்கும் இரு மின்மாற்றிகளையும் புதிதாக மாற்றி சீரான மின் விநியோகம் செய்ய மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.