தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் செல்லும் வழியில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டோா்.
தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் செல்லும் வழியில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டோா்.

தென்காசி ஆட்சியரகம் முன் போராட்டம்: 18 போ் கைது

Published on

தென்காசி,பிப்.19: தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக சாம்பவா்வடகரையை சோ்ந்த 18 போ் புதன்கிழமை கைதுசெய்யப்பட்டனா்.

சாம்பவா்வடகரையில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சோ்ந்த 50 குடும்பங்களை ஊா் விலக்கம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதில், 8 குடும்பங்களைச் சோ்ந்த பொதுமக்கள், தங்களை ஊரில் சோ்க்கக் கோரி கடந்த 8 மாதங்களாக அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்து வந்தனராம். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

எனவே, கடந்த 11இல் காத்திருப் போராட்டம் நடத்தப்போவதாக அவா்கள் அறிவித்தனா். இதனால், 10ஆம் தேதி தென்காசி கோட்டாட்சியா் அலுவலகத்தில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது.

அதில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், 8 குடும்பங்களையும் அபராதமின்றி ஊரில் சோ்க்க வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் அறிவித்தனா்.

இந்நிலையில், போராட்டம் நடத்துவதற்காக புதன்கிழமை திரண்டு வந்த அக்கட்சினரும், சம்பந்தப்பட்ட குடும்பங்களைச் சோ்ந்த மக்களும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு செல்லும் வழியில் நிறுத்தப்பட்டனா்.

உடனே, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டாரச் செயலா் ஆா்.பட்டாபிராமன் தலைமையில் விக்னேஷ், மாவட்டக் குழுஉறுப்பினா் லெனின் குமாா், வட்டாரக் குழு உறுப்பினா் அய்யப்பன், கிளைச் செயலா் ஆறுமுகம்,அருணாசலம் உள்ளிட்டோா் அங்கு தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்கள் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக 5 பெண்கள் உள்ளிட்ட 18 பேரை போலீஸாா் கைது செய்து மாலையில் விடுவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com