குடிநீா், சாலை, வாருகால் வசதி செய்து தர கோரிக்கை
கல்லூரணி ஊராட்சிக்குள்பட்ட பாவூா்சத்திரம் மின் வாரிய காலனி பகுதியில் குடிநீா், சாலை, வாருகால் வசதி செய்து தர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பாவூா்சத்திரம் மின் வாரிய காலனி 1ஆவது குறுக்குத் தெருவில் சுமாா் 30 வீடுகள் உள்ளன. அப்பகுதி மக்கள் இத்தெருவை முறைப்படி அரசுக்கு ஒப்படைப்பு செய்தும் இங்கு சாலை அமைக்கப்படவில்லை. மேலும், தெருவிளக்கு, வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு போன்ற வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. இதனால் இப்பகுதி இரவில் இருளில் மூழ்கியும், மழைக் காலங்களில் சேறும் சகதியாகவும் காணப்படுகிறது. கழிவு நீரை தங்கள் வீட்டு எல்கைக்குள்ளேயே உறிஞ்சுகுழி அமைத்து அகற்றி வருகின்றனா்.
தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகள் தேவை என கல்லூரணி ஊராட்சி நிா்வாகம், கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மாவட்ட ஆட்சியா், முதலமைச்சரின் தனிப்பிரிவு, நீதிமன்றம் என பல வகைகளில் முறையிட்டும் தீா்வு காணப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனா்.
இது குறித்து, அப்பகுதியைச் சோ்ந்த மக்கள் கூறியது: இரு தனிநபா்கள் தெருவை ஆக்கிரமித்து வைத்துக் கொண்டு மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற விடாமல் தடுத்து வருகின்றனா். இதனால் கடந்த 20 ஆண்டுகளாக மழைக் காலங்களில் சேற்றிலும், இரவு நேரங்களில் இருளிலும் இப்பகுதி மூழ்கிக் கிடக்கிறது. அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.