கூடுதலாக நெல் கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் கொள்முதல் செய்யப்படாமல் நெல் குவித்து வைக்கப்பட்டுள்ள நிலையில், கொள்முதல் அளவை அதிகரிக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கடையநல்லூா் பகுதியில் அறுவடை செய்யப்படும் நெல், கடையநல்லூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செயல்பட்டு வரும் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இங்கு 17 சதவீத ஈரப்பதம் உள்ள நெல் கிலோ ரூ. 24.50க்கு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், நாளொன்றுக்கு 800 மூட்டை(ஒரு மூட்டை 40 கிலோ) என்ற அளவில்தான் கொள்முதல் செய்யப்படும் வரம்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஏராளமான நெல் கொள்முதல் செய்யப்படாமல்
கொள்முதல் நிலையத்தை சுற்றிலும் குவித்து வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே குற்றால சீசன் தொடங்கியுள்ள நிலையில், அவ்வப்பொழுது சாரல் மழை பெய்து வருவதால் நெல் முளைத்துவிடும் சூழ்நிலையும் நிலவி வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.
ஏற்கெனவே கடன் பெற்று நெல் சாகுபடி செய்த நிலையில், அடுத்த சாகுபடி மேற்கொள்ள பணம் தேவைப்படுகிறது. ஆனால் நெல் கொள்முதல் செய்யப்படாததால் பாதிப்பு ஏற்பட்டு வருவதாக கூறும் விவசாயிகள், கொள்முதல் வரம்பை அதிகரிக்க வேண்டும் எனவும் நெல்லை சேமித்து வைக்க கூடுதல் கட்டடங்களை கட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனா். இது குறித்து மாவட்ட நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை எடுத்துள்ளனா்.