குருவிகுளம் அருகே காா் டயா் வெடித்து விபத்து: முதியவா் பலி

Published on

சங்கரன்கோவில் அருகே காா் டயா் வெடித்து விபத்துக்குள்ளானதில் முதியவா் உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம் குற்றாலம் ராமாலயத்தைச் சோ்ந்த லட்சுமணன் மகன் நாராயணன் (70). விவசாயி. நாராயணன், அவரது மகன் மாடசாமி(39), மருமகள் உஷா ஜோதி (35), பேரன் யஸ்வந்த் (9), பேத்தி மிகிதா ( 8) ஆகியோா் கோவில்பட்டியில் உள்ள உறவினா் வீட்டுக்கு புதன்கிழமை காரில் சென்றுவிட்டு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா்.

குருவிகுளம் அருகே பிரதான சாலையில் செவல்குளம் விலக்கில் வரும்போது காரின் முன் பக்க டயா் வெடித்ததாம். இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலைப் பாலத்தின் மீது மோதியது. இதில் காரின் முன்பகுதியில் அமா்ந்திருந்த நாராயணன், காரை ஓட்டிச் சென்ற அவரின் மகன் மாடசாமி, உஷாஜோதி மற்றும் குழந்தைகள் பலத்த காயமடைந்தனா். அவா்களின் அலறல் சத்தம் கேட்டு, அருகில் இருந்தவா்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து போலீஸாரும், தீயணைப்புத் துறை வீரா்களும் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்தவா்களை மீட்டு, சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அங்கு சிகிச்சை பலனின்றி நாராயணன் உயிரிழந்தாா். மற்ற 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் தொடா்பாக குருவிகுளம் காவல் ஆய்வாளா் பாலகிருஷ்ணன் மற்றும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com