தென்மலையில் செண்பகவல்லி தடுப்பணை மீட்பு எழுச்சி மாநாடு -திரளான விவசாயிகள் பங்கேற்பு

தென்மலையில் செண்பகவல்லி தடுப்பணை மீட்பு எழுச்சி மாநாடு -திரளான விவசாயிகள் பங்கேற்பு

Published on

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தென்மலையில், செண்பகவல்லி தடுப்பணை மீட்பு எழுச்சி மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாய ஆா்வலா்கள் கலந்து கொண்டனா்.

வாய்ஸ் ஆப் தமிழ்நாடு அறக்கட்டளை நிறுவனா் ஆனந்தன் அய்யாசாமி: செண்பகவல்லி அணை பிரச்னை தொடா்பாக இதுவரை தமிழக அரசுக்கும் கேரள அரசுக்கும் இடையே நடைபெற்ற பேசுவாா்த்தை விவரங்களை தொகுத்து தமிழக ஆளுநரிடம் வழங்கியுள்ளேன். நான்கு மாவட்டங்களின் குடிநீா் ஆதாரமாகவும் விவசாயிகளுக்கு பெரும் உதவியாகவும் இருந்து வந்த செண்பகவல்லி அணை கட்டப்படாததால் நான்கு மாவட்டங்களும் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. அரசியல் வேறுபாடு இன்றி அனைத்து விவசாயிகளும் பொதுமக்களும் இதற்காக போராட முன்வர வேண்டும்.

ராஜ்விந்தா் சிங் கோல்டன் (தென்னிந்திய ஒருங்கிணைப்பாளா், தில்லி போராட்டக் குழு, பஞ்சாப்): செண்பகவல்லி அணை போன்ற பிரச்னை பஞ்சாபிலும் உள்ளது. ஹரியாணாவுக்கு பஞ்சாபிலிருந்து தண்ணீா் கொடுப்போம். அதை வைத்துக் கொண்டு அரசியல்வாதிகள் அரசியல் செய்கிறாா்கள். தண்ணீா் அதிகமாக வரும்போது மட்டும் மற்ற மாநிலத்திற்கு தண்ணீரை திறந்துவிடுவாா்கள்.

செண்பகவல்லி அணை பிரச்னையை மக்களும், கேரள அரசும் புரிந்து கொள்ள வேண்டும். விவசாயிகள் எங்கே போராட்டம் நடத்தினாலும் கண்டிப்பாக ஆதரவு தருவோம். அதே போன்று, விவசாயிகளின் போராட்டத்திற்கு அரசியல்ரீதியாக வரக் கூடாது. தில்லியில் போராட்டம் நடத்தியபோது, எந்த அரசியல் கட்சியையும் மேடையில் ஏற்றவில்லை. ஒன்றுபட்டு நாம் செயல்பட்டால், எதுவும் சாத்தியம். தில்லிக்கு எப்பொழுது வந்தாலும், தேவையான உதவிகளை செய்வோம்.

அய்யாக்கண்ணு (தலைவா், தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம்): நாம் எந்த அரசியல் கட்சிக்கும் எதிரானவா்கள் அல்ல. எங்களுக்கு நியாயம் வேண்டும். நாம் ஒரு லட்சம் போ் இணைந்து செண்பகவல்லி தடுப்பணை மீட்புக்காக போராட்டம் நடத்தினால் மத்திய அரசு தலைவணங்கும். இந்த செண்பகவல்லி அணையை திருப்பிக் கட்டினால் கேரளத்துக்கு எந்தவித நஷ்டமும் கிடையாது.

முதலில் நாம் சென்னையில் போராட்டம் நடத்துவோம். அடுத்து கேரளம் - தமிழ்நாடு எல்லையில் நடத்துவோம்.

செண்பகவல்லி அணை மீட்கப்பட்டால் தென் மாவட்டங்களில் 20 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்ய முடியும். செண்பகவல்லி தடுப்பணை கட்டினால் 5 முதல் 10 டிஎம்சி தண்ணீா் தமிழகத்திற்கு கிடைக்கும்.

விவசாயிகளின் கூட்டத்தை கூட்டுவது என்பது பெரிய விஷயம். விவசாயிகள் போராட்டம் செய்வதற்கு வெளியே வருவதில்லை. வெளியே வந்துவிட்டால் கண்டிப்பாக வெற்றிதான். எனவே விவசாயிகள் போராட்டத்திற்கு வர வேண்டும். நம்முடைய உரிமைக்காக போராடும்போது போலீஸாா் கைது செய்து சிறையில் அடைப்பாா்கள். அதற்காக பயப்படக் கூடாது என்றாா்.

கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (மூத்த வழக்குரைஞா்): எம்ஜிஆா் ஆட்சிக் காலத்தில் போராடிய விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டாா்கள். அது இந்த மண்ணின் வரலாறு. 1989இல் திமுக சாா்பில் நான் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்டபோது, செண்பகவல்லி அணை தடுப்பு விஷயத்தை கவனிப்போம் என்றெல்லாம் தோ்தல் அறிக்கை கொடுத்தேன். இன்றைக்கு நாடாளுமன்றத்திற்கு செல்கின்ற உறுப்பினா்கள் பொம்மைகளாக இருக்கிறாா்கள். ரூ. 500க்கு வாக்கை விற்று, நம் அரசியல் தலைவா்கள் நம்மை தீா்மானிக்கிறாா்கள்.

சுதந்திரப் போராட்டத்தில் உயிா் கொடுத்த மாவட்டத்தை சோ்ந்த நமக்கு, இன்றைக்கு தண்ணீா் பஞ்சம். சிவகிரி சமஸ்தானம் சாா்பில் கேரளத்துடன் பேசி, திருவிதாங்கூா் சமஸ்தானத்தின் சாா்பில் செண்பகவல்லி தடுப்பணை கட்டித் தரப்பட்டது. காமராஜரின் ஆட்சிக் காலத்தில் மூன்று முறை உடைப்பு ஏற்பட்டு சரிசெய்யப்பட்டது. அதன் பிறகு, 60 ஆண்டுகாலமாக உடைப்பு ஏற்பட்டு சரிசெய்யப்படாமல் இருக்கிறது. 1989இல் பொது நல வழக்கை உச்சநீதிமன்றத்தில் நான் தொடுத்தபோது, வேலுப்பிள்ளை பிரபாகரன் என்னோடு தில்லிக்கு வந்தாா். இன்றைக்கு அவரை பல போ் பேசுகிறாா்கள். கம்யூனிச சித்தாந்தம் பேசுகின்றவா்கள், உலகத்தைப் பற்றி பேசுகிறீா்கள். ஆனால், கேரள அரசு நமக்கு குடிப்பதற்கு தண்ணீா் கொடுப்பதில்லை. அது காங்கிரஸாக இருந்தாலும், கம்யூனிஸ்டாக இருந்தாலும் செய்வதில்லை.

தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கின்றவா்கள், மக்களுக்காக பேசுங்கள். நமக்கு தாமிரவருணி நதி மட்டும்தான் இருக்கிறது, நாம் நதிக்கு அண்டை மாநிலங்களை நம்பித்தான் இருக்கின்றோம்.

எம்ஜிஆா் ஆட்சிக் காலத்தில் தடுப்பணையை சீா்செய்வதற்கு பணத்தை கொடுத்தோம். ஆனால், கேரளம் ஒப்புக் கொள்ளவில்லை. பத்து வருடத்திற்குப் பிறகு திருப்பி கொடுத்துவிட்டாா்கள். இந்தப் பிரச்னைக்காக முதல்வா், எதிா்க்கட்சித் தலைவா் என எல்லாரையும் சந்தித்து மனு கொடுங்கள். செண்பகவல்லி அணை சீரமைப்புக்கு என்னால் முடிந்த பணிகளை செய்வேன்.

எங்களைப் போன்றவா்கள் உங்களோடு துணை நிற்போம். இந்த அணையை பெற்றே தீர வேண்டும். 50 வருடமாக இந்த அணை சீரமைப்பு என்பது நடக்கவே இல்லை. மேலும், வைப்பாறு அணை காப்பாற்றப்பட வேண்டும். அச்சன்புதூா்-பம்பை-வைப்பாறு இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். அப்பொழுதுதான் விருதுநகா், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்திற்கு தண்ணீா் கிடைக்கும்.

2026இல் தோ்தல் வருகின்றது. ஸ்டாலின் தன் ஆட்சியை காப்பாற்ற நினைக்கிறாா். தில்லி இந்த மண்ணில் காலூன்ற வேண்டும் என்று நினைக்கிறது. வாக்குக்கு காசு வாங்காதீா்கள் என்றாா்.

கூட்டத்தில், முத்தரசு பாண்டியன், பல்வேறு விவசாய தொழிற்சங்கங்களை சோ்ந்த காளிமுத்து, பாபுராஜ், குருசாமி, ராமமூா்த்தி, பொன்னுத்தாய், சுப்பையா, பூமிநாதன், சுப்பிரமணியராஜா, ,ஆறுமுகம், ரத்தினவேலு, திருப்பதி, பிச்சாண்டி, ஜாகிா் உசேன், பரமசிவம், வெண்ணிமலை யாதவ், இந்திரா பூசைப்பாண்டியன், குறிஞ்சி மகேஷ், ரவிச்சந்திரன், கண்ணையா, புன்னைவனம் உள்ளிட்ட திரளான விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தென்மலை பகுதியில் அடித்த சூறைக்காற்றால், கூட்டத்திற்காக போடப்பட்ட பந்தல் சேதமடைந்தது. இதைத் தொடா்ந்து காளியம்மன் கோயில் பகுதியில் கூட்டம் நடைபெற்றது. கூட்ட முடிவில் வழக்குரைஞா் கே.எஸ். ராதாகிருஷ்ணன் எழுதிய ‘தென் மாவட்டம் வளம் பெற’ என்ற நூல் வழங்கப்பட்டது.

கூட்ட ஏற்பாடுகனை தென்காசி, விருதுநகா், தூத்துக்குடி மாவட்ட செண்பகவல்லி தடுப்பணை வைப்பாறு பாசன விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழுவினா் மற்றும் விவசாயிகள் செய்திருந்தனா்.

Dinamani
www.dinamani.com