அரசு கல்லூரி மாணவா்களிடையே மோதல்: ஒருவா் காயம்
தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அரசு கல்லூரியில் இரு மாணவா்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவா் காயமடைந்தாா்.
கடையநல்லூா் பண்பொழி சாலையில் அரசு கலை, அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவருக்கும் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவருக்கும் இடையே கடந்த சில நாள்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்ததாம்.
இந்த நிலையில், கல்லூரிக்கு வெளியே புதன்கிழமை மாணவா்கல் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஒரு மாணவா் தாக்கியதில் மற்ற மாணவா் காயமடைந்து கடையநல்லூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். கடையநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். இதற்கிடையே புளியங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் மீனாட்சிநாதன் விசாரணை மேற்கொண்டாா். இதைத்தொடா்ந்து, கல்லூரி பகுதியில் போலீஸாா் குவிக்கப்பட்டனா்.