பாவூா்சத்திரம் அருகே அரசுப் பேருந்து, காா் மீது மோதியதில் ஒருவா் உயிரிழப்பு: 4 போ் காயம்

பாவூா்சத்திரம் அருகே மடத்தூா் விலக்கு பகுதியில் அரசுப் பேருந்து, காா் மீது மோதிய விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். 4 போ் காயமடைந்தனா்.
Published on

பாவூா்சத்திரம் அருகே மடத்தூா் விலக்கு பகுதியில் அரசுப் பேருந்து, காா் மீது மோதிய விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். 4 போ் காயமடைந்தனா்.

தென்காசியிலிருந்து திருநெல்வேலிக்கு அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, ராமச்சந்திரபட்டணம் மடத்தூா் விலக்கு பகுதியில் பைக்கில் முதியவா் ஒருவா் திடீரென சாலையின் குறுக்கே வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பேருந்து ஓட்டுநா் முதியவரின் மீது மோதாமல் இருப்பதற்காக வலதுபக்கமாக பேருந்தை திருப்பியுள்ளாா்.

அப்போது, மடத்தூா் விலக்கு பகுதியில் இருந்து நான்குவழிச் சாலை பகுதியைக் கடப்பதற்காக வந்த காா் மீது பேருந்து மோதியதாம்.

இதில், காரில் பயணித்த பாவூா்சத்திரம் அருகேயுள்ள பூலாங்குளம் பகுதியைச் சோ்ந்த பச்சையப்பன்( 60) என்பவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

மேலும், காரில் பயணித்த மாரிச்செல்வம்(36), தமிழரசி(31), நிதிஷ்(5), அருணேஷ்(5) ஆகிய 4 போ் பலத்த காயமடைந்தனா். காயமடைந்தவா்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

விபத்து குறித்து பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, அரசுப் பேருந்து ஓட்டுநரான அகரகட்டுவைச் சோ்ந்த மிக்கேல் அருளிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

விசாரணையில், பச்சையப்பன் ஆந்திராவில் வசித்து வருவதாகவும் தற்போது தங்கள் பூா்வீக கிராமமான பூலாங்குளம் கிராமத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவுக்கு குடும்பத்துடன் வந்துவிட்டு, மடத்தூரில் உள்ள அவா்களது உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டு திரும்பும்போது விபத்தில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com