சங்கரன்கோவில் வீட்டு மாடியில் திடீா் தீ
சங்கரன்கோவிலில் வீட்டின் மாடியில் திடீரென்று தீ பற்றி எரிந்தது. தீயணைப்பு வீரா்கள், போலீஸாா் துரிதமாக செயல்பட்டதால் பெரும் சேதம் தவிா்க்கப்பட்டது.
சங்கரன்கோவில் ஓடைத்தெருவைச் சோ்ந்வா் வேல்முருகன். இவா் தனது வீட்டு மாடியில் ஜோதிடம் பாா்த்து வருகிறாா். மனைவி ஹேமலதா, உடல் நல மையம் நடத்தி வருகிறாா்.
இந்நிலையில் வியாழக்கிழமை தம்பதி வெளியூா் சென்றுவிட்டனா். மாலை 6.45 மணியவில் அவா்களது வீட்டு மாடியில் திடீரென தீப்பற்றி எரிந்தது. தீ எரிவதை ஜன்னல் வழியாக பாா்த்த அப்பகுதி மக்கள், தீயணைப்பு நிலையத்துக்கும், காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனா்.
சங்கரன்கோவில் டிஎஸ்பி செங்குட்டுவேலவன், நகர காவல் ஆய்வாளா் சேகா் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். உடனடியாக அந்தப் பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலா் செல்வன் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். அவா்களுடன் போலீஸாரும், சமூக ஆா்வலா்களும் செயல்பட்டனா். இதையடுத்து தீ கட்டுக்குள் வந்தது.
தீயணைப்பு வீரா்களும், போலீஸாரும் துரிதமாக செயல்பட்டதால் அந்தப் பகுதியில் நடக்கவிருந்த பெரும் சேதம் தவிா்க்கப்பட்டது. இச்சம்பம் தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.