தென்காசியில் காய்கனிச் சந்தை வியாபாரிகள் கடையடைப்புப் போராட்டம்
தென்காசி நகராட்சி தினசரி காய்கனிச் சந்தை புதிய கட்டடத்தில் கடைகள் ஒதுக்கீடு செய்யக் கோரி, வியாபாரிகள் வியாழக்கிழமை கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுதொடா்பாக தினசரிச் சந்தை காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவா் ஜி. வெங்கடேஷ் கூறியது: தென்காசி தினசரி காய்கனிச் சந்தையில் 40 ஆண்டுகாலமாக தினசரி குத்தகை செலுத்தி 120 கடைகளை நடத்தி வந்தோம். 8.11.23இல் பழைய கடைகளை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டுவதற்கான ஆணை வெளியிடப்பட்டது. இதுதொடா்பான கூட்டத்தில் பங்கேறக எங்களது சங்கத்துக்கு ஆணையா் அழைப்பு விடுத்தாா். புதிய கட்டடப் பணிக்காக கடைகளை காலிசெய்துதரும்படிக் கேட்டுக்கொண்டாா். பின்னா், எங்கள் கோரிக்கையை ஏற்று ஆணையரும், நகா்மன்றத் தலைவரான ஆா். சாதிரும் சோ்ந்து, நாங்கள் தொடா்ந்து வியாபாரம் செய்வதற்காக அருகேயுள்ள பூங்கா வளாகத்தில் 100 தற்காலிகக் கடைகள் அமைத்துத் தந்தனா்.
1.3.24இல் அந்தக் கடைகளைப் பெற்று, உரிமம், சான்றுடன் வியாபாரம் செய்துவருகிறோம். கடைகள் பராமரிப்புக்காக ரூ. ஒரு லட்சத்துக்கும் மேல் செலவழித்துள்ளோம். நகராட்சிக்கு நேரடியாக வாடகை செலுத்துகிறோம். இந்நிலையில், புதிய கட்டடப் பணி நிறைவடைந்தது. பழைய கட்டடத்தில் கடை நடத்திய அனைவருக்கும் புதிய கட்டடத்தில் கடை ஒதுக்கவேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்துள்ளோம்.
ஆனால், புதிய கடைகளை பொது ஏலம்விட முயல்வதாக அறிகிறோம். பொது ஏலத்தைத் தவிா்த்து, கடைகளை எங்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
புளியங்குடி தினசரிச் சந்தையில் பழைய கடைகளில் வியாபாரம் செய்தோருக்கே புதிய கட்டடத்தில் நகராட்சி நிா்வாகம் கடைகளை ஒதுக்கியுள்ளது. அந்த நடைமுறையை இங்கும் பின்பற்ற வலியுறுத்தி, கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
இப்பிரச்னையில் முதல்வா் தலையிட்டு, 500-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க உத்தரவிட வேண்டும். தாமதமேற்பட்டால் ஆக. 15இல் வியாபாரிகள் தங்களது குடும்பத்துடன் சோ்ந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றாா் அவா்.
போராட்டத்தில் சங்கத்தன் செயலா் டி.எஸ். பாண்டியன், பொருளாளா் கே.டி. நாராயணன், துணைத் தலைவா் சுடலைக்கனி, துணைச் செயலா் திவான் மீரா பிள்ளை, வியாபாரிகள் ஜி. குமாா், சிவசுப்பிரமணியன், பி.எம். முருகேசன், காசிப்பாண்டி, முப்பிடாதி கனி, முகம்மது சுபகாணி, தாவூத்மைதீன், ஐயப்பன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.