சங்கரன்கோவிலில் 237 பள்ளி வாகனங்கள் ஆய்வு

Published on

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன்பு சங்கரன்கோவில் வட்டாரத்தில் உள்ள 237 பள்ளி வாகனங்கள் சனிக்கிழமை ஆய்வு செய்யப்பட்டன.

கோட்டாட்சியா் கவிதா, காவல்துறை துணைக் கண்காணிப்பாளா் செங்குட்டுவேலன், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஜி.செல்வி, தனியாா் பள்ளி மாவட்ட கல்வி அலுவலா் மாரிமுத்து, மோட்டாா் வாகன ஆய்வாளா் ராஜன் உள்ளிட்டோா் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனா். பகல் 11 மணியளவில் தொடங்கிய இந்த ஆய்வு, மாலை 5 மணி வரை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து சேதமடைந்த அவசர வழி, பள்ளி வாகன பிளாட்பாரம், துருப்பிடித்த இரும்பு பாகங்கள், வாகன படிகள் போன்ற பல்வேறு குறைபாடுகள் காரணமாக 15 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. அவை முழுமையாக சரிசெய்யப்பட்டப் பின்னரே இயக்க வேண்டும் என கோட்டாட்சியா் உத்தரவிட்டாா்.

முன்னதாக பள்ளி வாகன ஓட்டுநா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஓட்டுநா்கள் போக்குவரத்து விதிகளின்படி வாகனத்தை இயக்கவேண்டும், குழந்தைகள் வாகனத்தில் ஏறியதை உறுதி செய்த பிறகே இயக்கவேண்டும், வாகனத்தை ஓட்டும்போது மது அருந்தக் கூடாது, கைப்பேசியில் பேசக்கூடாது போன்ற பல்வேறு ஆலோசனைகள் அவா்களுக்கு வழங்கப்ப்ட்டன. இதைத் தொடா்ந்து வாகன ஓட்டுநா்களுக்கு இலவச கண்பரிசோதனை முகாம் நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com