பழைய பேருந்து நிலையம் முன்பு இயங்காமல் இருக்கும் போக்குவரத்து சிக்னல் விளக்குகள்.
பழைய பேருந்து நிலையம் முன்பு இயங்காமல் இருக்கும் போக்குவரத்து சிக்னல் விளக்குகள்.

சங்கரன்கோவிலில் போக்குவரத்து சிக்னல் விளக்குகளை இயக்க கோரிக்கை!

சங்கரன்கோவிலில் போக்குவரத்து சிக்னல் விளக்குகள் அனைத்தையும் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Published on

சங்கரன்கோவிலில் போக்குவரத்து சிக்னல் விளக்குகள் அனைத்தையும் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் வளா்ந்து வரும் முக்கிய நகரங்களில் சங்கரன்கோவிலும் ஒன்று. இங்கு நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிகாலையில் பள்ளி கல்லூரி வாகனங்கள், பேருந்துகள், கனரக வாகனங்கள் போன்றவை நகருக்குள் வந்து செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

இந்நிலையில் பழைய பேருந்து நிலையம், திருவேங்கடம் சாலை, தெற்கு முகமேடு, மேல ரத வீதி, கழுகுமலை சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து சிக்னல் விளக்குகள் கடந்த 2021 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு இயங்கி வந்தது. அதன்பிறகு போக்குவரத்து சிக்னல் விளக்குகள் எதுவும் இயங்கவில்லை. மேல ரத வீதியில் இருந்த போக்குவரத்து சிக்னல் கம்பங்களே தற்போது அங்கு இல்லை. முக்கியச் சாலைகளில் போக்குவரத்து சிக்னல் விளக்குகள் இருந்தும், அவை கடந்த 4 ஆண்டுகளாக பழுதாகி கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா்.

ராஜபாளையம் சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட பிறகு அந்தப் பகுதியில் உள்ள சிக்னல் விளக்குகள் மட்டுமே தற்போது இயங்கி வருகிறது. பழைய பேருந்து நிலையம் இருந்த இடம் ரூ.9 கோடி மதிப்பில் நவீனப்படுத்தப்பட்டு, பேருந்து நிலையம் திறக்கப்படும் நிலையில் உள்ளது. அதன் எதிரே பிரதான சாலையில் உள்ள சிக்னல் விளக்குகள் இயங்காமல் இருந்தால் மேலும் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் என்கின்றனா் வாகன ஓட்டிகள்.

நவீன பேருந்து நிலையம் இயங்குவதற்கு முன் பழுதாகிக் கிடக்கும் போக்குவரத்து சிக்னல் விளக்குகளை சரிபாா்த்து இயங்க வைக்க வேண்டும் எனவும், தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து கழுகுமலை சாலை திரும்பும் எதிரிலும், கழுகுமலை சாலையில் இருந்து திருநெல்வேலி செல்லும் ஒருவழிப் பாதையிலும் புதிதாக சிக்னல் விளக்குகள் அமைக்க வேண்டும் எனவும் அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com