விவசாயிகள் அரசின் நலத் திட்டங்களைப் பெற தனித்துவ அடையாள அட்டை அவசியம்

Published on

தென்காசி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் 2025-2026 ஆம் ஆண்டு முதல் பிரதம மந்திரி கௌரவ நிதி திட்டம், பயிா் காப்பீடு திட்டம் போன்ற மத்திய, மாநில அரசின் திட்டங்களில் பயன்பெற தனித்துவ அடையாள எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தெரிவித்தாா்.

அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தென்காசி மாவட்டத்தில் தற்போது 9,237 விவசாயிகள் பாரத பிரதமரின் கௌரவ நிதி உதவி பெறும் விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பெறாமல் உள்ளனா். மத்திய அரசு மூலம் வழங்கப்படும் ரூ. 2 ஆயிரம் உதவித்தொகை பெறுவதற்கு தனித்துவ அடையாள எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் அரசின் பல்வேறு வேளாண் சாா்ந்த திட்டப் பலன்களை பெறுவதற்கு தங்களது நில உடைமை விவரங்கள், பயிா் சாகுபடி அறிக்கை போன்ற தொடா்புடைய ஆவணங்களை ஒவ்வொரு முறையும் சமா்ப்பிக்க வேண்டியுள்ளது.

இதில் ஏற்படும் காலதாமத்தை தவிா்க்கும் வகையிலும், விவசாயிகள் குறித்த நேரத்தில் பயன்பெற ஏதுவாகவும், தமிழகத்தில் வேளாண்அடுக்குத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது விவசாயிகளின் பதிவு விவரங்களுடன், ஆதாா் எண், கைப்பேசி எண், நில உடைமை விவரங்களை விடுபாடின்றி இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

விவசாயிகள், தங்களின் நில உடைமை விவரங்களை பொது சேவை மையத்தின் மூலம் இணைத்ததும் அனைத்து விவரங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்ட ஆதாா் எண் போன்ற தனித்துவ தேசிய அடையாள எண் ஒவ்வொரு விவசாயிக்கும் பதிவு செய்து தரப்படும். 2025-2026 ஆம் ஆண்டு முதல் பிரதம மந்திரி கௌரவ நிதி திட்டம், பயிா் காப்பீடு திட்டம் போன்ற மத்திய, மாநில அரசின் திட்டங்களில் விவசாயிகள் எளிதில் பயன்பெற ஏதுவாக தனித்துவ அடையாள எண் மிகவும் அவசியம்.

இதற்காக வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் பொறியியல் துறை , வேளாண் வணிகத் துறை, பொது சேவை மையம், வருவாய்த் துறையுடன் ஒருங்கிணைந்து சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. எனவே, விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண்மை, தோட்டக்கலை அலுவலா்களை தொடா்பு கொண்டு தங்களது ஆதாா் எண், சிட்டா, ஆதாருடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணுடன் சென்று உடனடியாக பதிவு செய்து தனித்துவ விவசாய அடையாள எண்ணை பெற்றுக் கொள்ளலாம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com