புளியறை வழியாக கேரளம் செல்லும் கனிம வள வாகனங்களை நிறுத்த வேண்டும்: எம்எல்ஏ வலியுறுத்தல்
சபரிமலை ஐயப்பன் கோயில் சீசன் தொடங்கியதையடுத்து, புளியறை வழியாக கேரளத்துக்கு செல்லும் கனிம வள வாகனங்களை அடுத்த இரண்டு மாதங்களுக்கு அனுமதிக்கக் கூடாது என்று செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தாா்.
அவா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
தென்காசி மாவட்டத்திலிருந்து பல ஆயிரம் டன் கனிம வளங்கள் தினசரி நூற்றுக்கும் அதிகமான கனரக லாரிகள் மூலம் கேரளத்துக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. தற்போது சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை காா்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு திங்கள்கிழமை முதல் தொடங்கியுள்ளதால் தமிழகம் மட்டுமின்றி கா்நாடகம், ஆந்திரம் உள்பட வெளி மாநிலங்களில் இருந்து பல ஆயிரம் பக்தா்கள் தென்காசியை அடுத்த செங்கோட்டை, புளியறை வழியாக சபரிமலைக்கு செல்வா். தினசரி ஆயிரத்தும் மேற்பட்ட வாகனங்கள் இந்தச் சாலை வழியாக செல்லும்.
இதற்கிடையே கேரளத்துக்கு கனிம வளங்கள் ஏற்றிச் செல்லும் கனரக லாரிகளால் இந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு எதிா்பாராத விபத்துகளும், உயிரிழப்புகளும் நிகழும்.
எனவே, இந்தப் பகுதி மக்களின் நலன் கருதி அடுத்த இரண்டு மாதங்களுக்கு கனரக லாரிகளில் கனிம வளங்களை கொண்டு செல்வதைத் தடுத்து ஐயப்ப பக்தா்கள், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
அத்துடன் கடையநல்லூா் தொகுதிக்கு உள்பட்ட நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டிருந்த வேகத்தடைகள் கடந்த மாதம் மாநில முதல்வா் வருகையை முன்னிட்டு அப்புறப்படுத்தப்பட்டது. இதனால் விபத்துகள் நிகழ்கின்றன. எனவே, அகற்றப்பட்ட வேகத் தடைகளை மீண்டும் அதே இடத்தில் அமைக்க வேண்டும் என அதில் கூறியுள்ளாா். அப்போது அச்சன்புதூா் பேரூராட்சி மன்றத் தலைவா் மருத்துவா் சுசீகரன் உடனிருந்தாா்.
