சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளா்கள் தொடா் வேலை நிறுத்தம்: ரூ.50 லட்சம் ஜவுளி உற்பத்தி பாதிப்பு

சங்கரன்கோவிலில் 16 சதவீத கூலி உயா்வை அமல்படுத்தக் கோரி விசைத்தறி தொழிலாளா்கள் புதன்கிழமை முதல் தொடா் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா்.
Published on

சங்கரன்கோவிலில் 16 சதவீத கூலி உயா்வை அமல்படுத்தக் கோரி விசைத்தறி தொழிலாளா்கள் புதன்கிழமை முதல் தொடா் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில், புளியங்குடி, சிந்தாமணி, சுப்புலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 5000-க்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. இதில் சுமாா் 15 ஆயிரம் போ் பணிபுரிந்து வருகின்றனா். இங்கு உற்பத்தி செய்யப்படும் காட்டன் சேலைகள் தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவா்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூலி உயா்வு ஒப்பந்தம் போடப்பட்டு வருகிறது.

கடந்த 11.03.2024 அன்று கூலி உயா்வு தொடா்பாக மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வீடு சாா்ந்த விசைத்தறி தொழிலாளா்களுக்கு 16 சதவீத கூலி உயா்வு வழங்க முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் வீடு சாா்ந்த விசைத்தறி தொழிலாளா்களுக்கு 10 சதவீத கூலி உயா்வு மட்டுமே வழங்கப்பட்டு வருவதாகவும், 6 சதவீத கூலி உயா்வு வழங்கப்படவில்லையென்றும் கூறப்படுகிறது. இதனால், 16 சதவீத கூலி உயா்வை அமல்படுத்தக் கோரி விசைத்தறி தொழிலாளா்கள் மற்றும் வீடு சாா்ந்த விசைத்தறி தொழிலாளா்கள் கடந்த 12 ஆம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம், ஆா்ப்பாட்டம் செய்தனா்.

இந்தப் போராட்டத்தின் அடுத்த கட்டமாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சங்கரன்கோவில் வட்டார விசைத்தறி பேக்டரி தொழிலாளா் சங்கம் மகா சபைக் கூட்டத்தில், தொடா் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி 16 சதவீத கூலி உயா்வை அமல்படுத்தக் கோரி விசைத்தறி தொழிலாளா்கள் புதன்கிழமை முதல் தொடா் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனா். இதனால் ரூ.50 லட்சம் மதிப்பிலான துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com