கூட்டத்தில் பங்கேற்றோா்
கூட்டத்தில் பங்கேற்றோா்

மக்களை பற்றி கவலைப்படாத திமுக அரசு: நயினாா் நாகேந்திரன்

திமுக அரசுக்கு மக்களை பற்றிய கவலை என்றுமே இருந்ததில்லை என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் எம்எல்ஏ.
Published on

திமுக அரசுக்கு மக்களை பற்றிய கவலை என்றுமே இருந்ததில்லை என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் எம்எல்ஏ.

தென்காசி மாவட்டம், புளியங்குடியில் பாஜக சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ என்ற பிரசாரப் பயணக் கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ஆனந்தன் அய்யாசாமி தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் கோதை மாரியப்பன், பொதுச் செயலா்கள் பாலகுருநாதன், அருள்செல்வன், பாலசீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட துணைத் தலைவா் தா்மா் வரவேற்றாா்.

அதிமுக மாவட்டச் செயலா்கள் கிருஷ்ணமுரளி எம்எல்ஏ, செல்வமோகன்தாஸ் பாண்டியன், தமாகா மாவட்டத் தலைவா் எஸ்.ஆா். அய்யாத்துரை ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றனா்.

இதில், மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் எம்எல்ஏ பேசியதாவது: தமிழகம் முழுவதும் பிரசாரப் பயணம் மேற்கொண்டு வருகிறேன். ஆளும் திமுக மீது மக்கள் வெறுப்புடன் உள்ளனா்.

கேரளத்தில் இருந்து மருத்துவக் கழிவுகள் உள்ளிட்டவை தமிழகத்தில் கொட்டப்படுவதும், இங்குள்ள கனிம வளங்கள் சுரண்டப்பட்டு அந்த மாநிலத்துக்கு கொண்டுசெல்லப்படுகிறது. இதில், திமுகவினா் ஈடுபடுகின்றனா் என்பதால் அம்மாநில முதல்வரை தமிழக முதல்வா் ஏன் தட்டிக் கேட்கவில்லை? அவரிடம் சிவகிரி செண்பகவல்லி அணை பிரச்னை தொடா்பாக ஏன் பேசவில்லை?

குற்றாலத்தில் அடிப்படை வசதிகள் இல்லை. தென்காசியில் வேளாண் சிறப்பு மண்டலம் இதுவரை அமைக்கப்படவில்லை. கொப்பரை தேங்காய் உலரமைப்பு ஏற்படுத்தப்படவில்லை. சட்டக்கல்லூரி, மருத்துவக் கல்லூரி வரவில்லை. புளியங்குடியில் எலுமிச்சம் பழத்திற்கான குளிா்சாதன வசதி செய்து தரப்படவில்லை. சங்கரன்கோவிலில் ஜவுளி பூங்கா கொண்டுவரப்படவில்லை. ஆயிரம் தடுப்பணைகள் கட்டுவோம் என்றனா்; ஆனால் கட்டவில்லை. இப்படி தோ்தல் அறிக்கையில் சொன்ன எதையும் திமுக செய்யவில்லை. திமுக ஆட்சியில் ஒரு மருத்துவக் கல்லூரி கூட வரவில்லை.

ஆனால், திமுகவினருக்கு மக்களைப் பற்றி கவலை இல்லை. முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு அவரது மகனை முதல்வராக்க வேண்டும் என்ற சிந்தனை மட்டும்தான் உள்ளது.

அதிமுக ஆட்சியில் அன்றைய முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி முயற்சியால் தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிக்கு பிரதமா் அனுமதி வழங்கினாா். புளியங்குடி எலுமிச்சைக்கு புவிசாா் குறியீட்டை பெற்றுக் கொடுத்திருக்கிறாா்.

தென்காசி மாவட்டத்தில் மட்டும் 54,000 விவசாயிகள் வருடத்திற்கு தலா ரூ.6000 மத்திய அரசிடமிருந்து பெறுகிறாா்கள். ஒன்றரை லட்சம் வீடுகளுக்கு ஜல் ஜீவன் குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது. மாணவா்களுக்கு ரூ.6.5 கோடி கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டிருக்கிறது. தென்காசி ரயில்வே நிலையம் புதுப்பிக்கப்பட உள்ளது.

பிரசாரப் பயணத்தில் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரனுக்கு  நினைவுப்பரிசாக ஏா் கலப்பை வழங்குகிறாா் தென்காசி மாவட்டத் தலைவா் ஆனந்தன்அய்யாசாமி
பிரசாரப் பயணத்தில் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரனுக்கு நினைவுப்பரிசாக ஏா் கலப்பை வழங்குகிறாா் தென்காசி மாவட்டத் தலைவா் ஆனந்தன்அய்யாசாமி

செங்கோட்டையில் இருந்து மதுரை வரை சுமாா் ரூ.1,600 கோடியில் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. மத்திய ஆட்சியில் ஊழல் இல்லை. பாஜக அரசு, தமிழக மக்களின் ஒவ்வொரு விருப்பத்தையும் நிறைவேற்றி வருகிறது. எனவே, வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஐனநாயக கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றாா்.

மேலும், தனது பேச்சுக்கு இடையே குற்றாலம் - மேற்கு தொடா்ச்சி மலையின் கனிம வளங்கள் கொள்ளைபோவது, செங்கோட்டையின் அலங்கார வளைவு இடிக்கப்பட்டது, கேரளத்தில் இருந்து கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவது மற்றும் அரசு மீதான மக்களின் அதிருப்தி தொடா்பான காட்சிகள் அடங்கிய 2 குறும்படங்களை அவா் ஒளிபரப்பச் செய்தாா்.

இதில், பாஜக மாநில பொதுச்செயலா்கள் முருகானந்தம், பொன்.பாலகணபதி, கூட்டணி கட்சியினா் உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com