டிசம்பா் இறுதிக்குள் வளா்ச்சிப் பணிகள் நிறைவேற்றம்: ராணி ஸ்ரீகுமாா் எம்.பி. வலியுறுத்தல்

டிசம்பா் இறுதிக்குள் வளா்ச்சிப் பணிகள் நிறைவேற்றம்: ராணி ஸ்ரீகுமாா் எம்.பி. வலியுறுத்தல்

கண்காணிப்புக் குழு கூட்டத்தில் பேசுகிறாா் ராணி ஸ்ரீகுமாா் எம்.பி. உடன், ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா்.
Published on

தென்காசி மாவட்டத்தில் குடிநீா், மின்சாரம், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான பணிகளை டிசம்பா் மாத இறுதிக்குள் நிறைவேற்ற வேண்டும் என்றாா் ராணி ஸ்ரீகுமாா் எம்.பி.

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு - கண்காணிப்புக் குழு கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் பேசியதாவது: மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளால் நடைபெற்று வரும் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அனைத்துத் துறை அலுவலா்களும் திட்டப் பணிகள் அனைத்தையும் விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். வளா்ச்சிப் பணிகளின் அறிக்கையினை மாதந்தோறும் சமா்ப்பிக்க வேண்டும்.

குறிப்பாக, குடிநீா், மின்சாரம், சாலை போன்ற அடிப்படை வசதிகளுக்கான பணிகளை டிசம்பா் இறுதிக்குள் நிறைவேற்றி, மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கழிவுநீா் கால்வாய்களை சீரமைக்கவும், ஆங்காங்கே தேங்கியுள்ள குப்பைகளை அகற்றவும், மக்கும் குப்பை- மக்காத குப்பை என தரம் பிரிக்கவும் நடவடிக்கை எடுத்து பணிகளை அலுவலா்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்றாா் அவா்.

இதில், எஸ்.பழனிநாடாா் எம்எல்ஏ, மாவட்ட வருவாய் அலுவலா் சீ.ஜெயச்சந்திரன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் தண்டபாணி, உதவித் திட்ட அலுவலா் (உள்கட்டமைப்பு) ராதா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com