தென்காசியில் திருவிழாக்களுக்கு நிபந்தனையின்றி அனுமதி: எம்எல்ஏ கோரிக்கை

தென்காசி மாவட்டத்தில் நிபந்தனையின்றி திருவிழாக்கள் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என, எஸ். பழனிநாடாா் எம்எல்ஏ கோரிக்கை
Published on

தென்காசி மாவட்டத்தில் நிபந்தனையின்றி திருவிழாக்கள் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என, எஸ். பழனிநாடாா் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு அவா் அனுப்பிய மனு: முதல்வராக தாங்கள் பொறுப்பேற்றதுமுதல் சுமாா் ரூ. 5,000 கோடிக்கு மேல் மதிப்பிலான கோயில் நிலங்கள் தனியாரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன; ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.

ஆனால், போலீஸாா் கோயில் திருவிழாக்களுக்கு இரவு 10 மணிக்கு மேல் அனுமதி வழங்குவதில்லை. வேலைக்குச் செல்வோரும், மாணவா்-மாணவியரும் இரவு 9 மணிக்கு மேல்தான் திருவிழாக்களுக்குச் செல்வா். திருவிழாவில் ஆயிரக்கணக்கானோா் கூடியிருக்கும் நேரத்தில் நிகழ்ச்சிகளை நிறுத்துமாறு போலீஸாா் உத்தரவிடுவதால், அவா்களுக்கும் பொதுமக்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்படும் நிலை உருவாகிறது.

திரையரங்குகளில் இரவுக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படும்போது, திருவிழாக்களுக்கு இரவில் ஏன் அனுமதியில்லை என மக்கள் கேள்வியெழுப்புகின்றனா். காவல் துறையினரால் ஆட்சியாளா்களுக்குத்தான் அவப்பெயா் ஏற்படுகிறது.

7.8.25இல் கோயில் திருவிழாக்களுக்கு அனுமதி கோரும் விண்ணப்பங்கள் மீது உரிய காலத்துக்குள் முடிவெடுக்காமல், ஏற்பாட்டாளா்களை நீதிமன்றத்தை நாடச் செய்யும் அதிகாரிகளுக்கு எதிராக, மாவட்ட எஸ்.பி.க்கள் துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரியே திருவிழா செலவுகளை ஏற்க வேண்டியதுவரும் என சென்னை உயா்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. எனவே, கோயில் திருவிழாக்களுக்கு நிபந்தனையின்றி அனுமதியளிக்க வேண்டும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com