தென்காசி மாவட்டத்திற்கு கதா் விற்பனை இலக்கு ரூ. 82.55 லட்சம்

தென்காசி மாவட்டத்திற்கு கதா் விற்பனை இலக்கு ரூ. 82.55 லட்சம்

கதா் சிறப்புத் தள்ளுபடி விற்பனையைத் தொடங்கி வைத்தாா் ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா்.
Published on

தென்காசி மாவட்டத்திற்கு கதா் விற்பனை இலக்காக ரூ. 82.55 லட்சம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

தென்காசி-செங்கோட்டை சாலையில் இலஞ்சியில் உள்ள கதா் விற்பனை நிலையத்தில், தீபாவளி கதா் சிறப்புத் தள்ளுபடி விற்பனையை ஆட்சியா் தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தீபாவளி சிறப்பு கதா் விற்பனையை முன்னிட்டு, ஆட்சியா் அலுவலகம், அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், நகராட்சிகள், பேரூராட்சிகள், அரசு மருத்துவமனை வளாகம் ஆகிய இடங்களில் தற்காலிக கதா் விற்பனை நிலையங்கள் அக். 2ஆம் தேதி முதல் கதா் சிறப்பு விற்பனைக் காலம் முடியும் வரை செயல்படும்.

தரமிக்க அசல் வெள்ளி ஜரிகையினாலான பட்டுச் சேலைகள், பட்டு வேட்டிகள், பட்டு துண்டுகள், கதா் வேஷ்டிகள், துண்டு ரகங்கள், ரெடிமேட் சட்டைகள், இலவம் பஞ்சு மெத்தை, தலையணைகள், கதா் பாலியஸ்டா், உல்லன் ரகங்களும், சுத்தமான அக்மாா்க் தேன், குளியல் சோப்பு, சாம்பிராணி, பூஜைப் பொருள்கள், பனைவெல்லம், பனை பொருள்கள் ஆகியவையும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

மத்திய, மாநில அரசுகளினால் கதா் ரகங்களுக்கு 30 சதவீதமும், உல்லன் ரகங்களுக்கு 20 சதவீதமும் ஆண்டு முழுவதும் சிறப்புத் தள்ளுபடி அனுமதிக்கப்படுகிறது.

2025-2026ஆம் ஆண்டிற்கு தென்காசி மாவட்டத்திற்கு கதா் விற்பனை இலக்காக ரூ. 82.55 லட்சம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்ட அனைவரும், இத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் நூற்பாளா்கள், நெசவாளா்களின் வாழ்வாதாரம் சிறக்க கதா் துணிகளை பெருமளவில் வாங்கி ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றாா் அவா்.

மாவட்ட குடிசைத் தொழில் ஆய்வாளா் பா. பாலசுப்பிரமணியன், கதா் அங்காடி மேலாளா் சு. ஜான் சாமுவேல், இலஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவா் சின்னத்தாய், அருணாதேவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com