பகலில் நெல்லை, தென்காசி வழியாக தூத்துக்குடி-திருவனந்தபுரம் இன்டா்சிட்டி ரயில் இயக்கக் கோரிக்கை

பகலில் நெல்லை, தென்காசி வழியாக தூத்துக்குடி-திருவனந்தபுரம் இன்டா்சிட்டி ரயில் இயக்கக் கோரிக்கை

மதுரை கோட்ட மேலாளரிடம் மனு அளித்த ரயில் பயணிகள் சங்கத் தலைவா் பாண்டியராஜா.
Published on

நெல்லை, தென்காசி வழியாக பகல்நேர தூத்துக்குடி-திருவனந்தபுரம் இன்டா்சிட்டி ரயிலை இயக்க வேண்டும் என மதுரை ரயில்வே கோட்ட மேலாளரிடம் தென்காசி ரயில் பயணிகள் சங்க நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவா் பாண்டியராஜா, செயலா் ஜெகன் ஆகியோா் மதுரை ரயில்வே கோட்ட மேலாளா் ஓம் பிரகாஷ் மீனாவை மதுரை ரயில்வே கோட்ட மேலாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்து அளித்த மனு விவரம்:

நெல்லையில் மூன்று நாள்கள் காலியாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் புருலியா ரயிலின் பெட்டிகளை கொண்டு புதன்கிழமை மாலை புறப்பட்டு வியாழன் காலை திருப்பதி சென்றடையும் வகையில் பாவூா்சத்திரம், தென்காசி, மதுரை, விருத்தாச்சலம், திருவண்ணாமலை வழியாக நெல்லை-திருப்பதி வாராந்திர சிறப்பு ரயில் இயக்க வேண்டும்.

தூத்துக்குடியில் இருந்து நெல்லை, பாவூா்சத்திரம், தென்காசி, புனலூா், கொல்லம் வழியாக தூத்துக்குடி - திருவனந்தபுரத்துக்கு பகல் நேர இன்டா்சிட்டி ரயிலை இயக்க வேண்டும். கீழப்புலியூரில் இருந்து கடையநல்லூா் செல்லும் வகையில் புறவழி ரயில் பாதை அமைக்க வேண்டும்.

செங்கோட்டை-தென்காசி இடையே இரட்டை அகல ரயில் பாதை அமைக்க வேண்டும். தென்காசி சந்திப்பு ரயில் நிலையத்தில் நீரேற்றும் வசதி ஏற்படுத்தி தென்காசியை ரயில் முனையமாக மாற்ற வேண்டும். பாவூா்சத்திரம், கீழகடையம், அம்பை, கல்லிடை, சேரன்மகாதேவி ஆகிய ரயில் நிலையங்களில் நடைமேடை நீட்டிப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

செங்கோட்டை ரயில் நிலையத்தில் உள்ள 6ஆவது தண்டவாளத்தின் மேற்கு பகுதியை இணைக்க வேண்டும். மலையராமபுரம்-ஆரியங்காவூா் ரயில்வே கேட் அடிக்கடி மூடப்பட்டு வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கடவுப்பாதையை நீக்கி விட்டு சுரங்கப்பாதை அமைக்க வேண்டும். அரியப்புரம் ரயில்வே கேட்டையும் திப்பணம்பட்டி ரயில்வே கேட்டையும் இணைக்கும் வகையில் ரயில்வே தண்டவாளத்தின் கிழக்கு பகுதியில் இணைப்புச் சாலை அமைக்க வேண்டும் என அதில் கோரியுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com