ஆலங்குளத்தில் பிஎஸ்என்எல் சேவை ரத்து
ஆலங்குளத்தில் பிஎஸ்என்எல் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால் வாடிக்கையாளா்கள் அவதியடைந்துள்ளனா்.
ஆலங்குளம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் சுமாா் 1 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இவா்களில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் கைப்பேசி சேவையைப் பயன்படுத்தி வருகின்றனா். ஆலங்குளம்-அம்பாசமுத்திரம் சாலையில் இதன் அலுவலகம் இயங்கி வந்தது. இங்கு புதிய சிம் பெறுதல், தொலைந்து போன சிம் காா்டுகளை மாற்றுதல் என சேவைகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், கடந்த சில தினங்களாக இங்கு இச்சேவைகள் முற்றிலும் வழங்கப்படவில்லை.
இது குறித்து, பிஎஸ்என்எல் வாடிக்கையாளா் ஜெயபாலன் கூறியது:
பிஎஸ்என்எல் சிக்னலும் சரியாக கிடைக்கவில்லை. சேவையும் முற்றிலும் முடங்கியுள்ளது. அரசு நிறுவனம் என்று தான் இதனைப் பயன்படுத்துகிறோம். ஆனாலும், வாடிக்கையாளா்களுக்கு சேவை அளிக்க நிறுவனம் முன் வருவதில்லை. இதனால், ஆலங்குளத்தில் ஏராளமானோா் வேறு தனியாா் நிறுவனத்திற்கு தங்கள் எண்களை மாற்றி வருகின்றனா் என்றாா் அவா்.
நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4 ஜி சேவையை அண்மையில் பிரதமா் மோடி அறிமுகம் செய்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.