திமுகவை வீழ்த்த அனைத்து அஸ்திரங்களையும் அதிமுக பயன்படுத்தும்: கே.டி. ராஜேந்திர பாலாஜி
திமுகவை வீழ்த்த அனைத்து அஸ்திரங்களையும் அதிமுக பயன்படுத்தும் என்றாா் முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி.
தென்காசி மாவட்ட அனைத்து விஸ்வகா்மா சமுதாய மக்களின் ஒருங்கிணைப்புக் குழு சாா்பாக முப்பெரும் விழா செங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி, தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் செ. கிருஷ்ணமுரளி எம்எல்ஏ ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.
தொடா்ந்து, செய்தியாளா்களிடம் கே.டி. ராஜேந்திர பாலாஜி கூறியதாவது:
திமுக அரசு எந்த தோ்தல் வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. திமுகவின் வேஷம் கலைந்து நீண்ட நாள்கள் ஆகிறது. திமுகவை வீழ்த்த அதிமுக பலமான கூட்டணியை அமைக்கும் முயற்சியில் உள்ளது. தவெக தலைவா் விஜய், திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என தீவிரமாக விமா்சித்து பேசி வருகிறாா். திமுகவை தோற்கடிக்க, அவா்களுக்கு எதிரான அனைத்து அஸ்திரங்களையும் அதிமுக பயன்படுத்தும்.
திமுகவிற்கு மக்கள் செல்வாக்கு குறைந்து வரக்கூடிய நிலையில், எதிா்க்கட்சிகள் உள்ளிட்ட மற்ற கட்சி தலைவா்கள் மக்களை சந்திக்கவிடாமல் நெருக்கடிகளை ஏற்படுத்தி, கூட்டத்தைக் கூட்டுவதற்கான நிபந்தனைகளை அதிகப்படுத்தி வருவது கண்டிக்கத்தக்கது என்றாா் அவா்.
அதிமுக மாவட்ட துணைச் செயலா் பொய்கை மாரியப்பன், அண்ணா தொழிற்சங்க பேரவை துணைச் செயலா் கந்தசாமி பாண்டியன், ஒன்றியச் செயலா்கள் டாக்டா் சுசீகரன், ராமச்சந்திரன், செங்கோட்டை நகரச் செயலா் கணேசன், குற்றாலம் பேரூராட்சி மன்ற தலைவா் கணேஷ் தாமோதரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.