வனவிலங்குகள் குடியிருப்புகளில் நுழைவதைத் தடுக்க வேண்டும்: ஆட்சியரிடம் செ. கிருஷ்ணமுரளி எம்எல்ஏ மனு

வனவிலங்குகள் குடியிருப்புகளில் நுழைவதைத் தடுக்க வேண்டும்: ஆட்சியரிடம் செ. கிருஷ்ணமுரளி எம்எல்ஏ மனு

Published on

தென்காசி மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிக்குள் வனவிலங்குகள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோரிடம் வியாழக்கிழை மனுக்கள் அளித்தாா்.

கடையநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதி வடகரை, சொக்கம்பட்டி, பண்பொழி, கரிசல்குடியிருப்பு, கற்குடி, புதூா் பேரூராட்சி, கண்ணுப்புளிமெட்டு, மோட்டை, மலையடிவாரப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகள்- விளைநிலங்களில் நுழைந்து மக்களின் உயிருக்கும் வாழை, தென்னை, நெல், உள்ளிட்ட பயிா்களுக்கும் மிகுந்த சேதங்களை ஏற்படுத்தும் காட்டு யானைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அரசு மேற்கொண்டுவரும் பணிகள் உரிய பலன் தரவில்லை.

மேலும், காட்டுப்பன்றி தாக்குதலும் அதிகரித்துள்ளது. இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

செங்கோட்டை நகா் பகுதிக்குள் சில நாள்களுக்கு முன்பு இரவு நேரத்தில் கரடி நடமாட்டம் இருந்துள்ளது. இது மக்களுக்களுக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, கரடியை கூண்டு வைத்து பிடித்து வனபகுதிக்குள் கொண்டுவிடவும், யானை, காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் அட்டகாசத்தை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாய்கள் தொல்லை: கடையநல்லூா் நகராட்சி பகுதிகளில் சுற்றித்திரியும் வெறிநாய்களால் கடந்த 8ஆம் தேதி 15 பேரும், 9ஆம் தேதி 15 பேரும் பாதிக்கப்பட்டு அரசு - தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டம் முழுவதும் சுற்றித் திரியும் வெறிநாய்களை கட்டுப்படுத்திட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மற்றொரு மனுவில் கூறியுள்ளாா்.

கனிம வளங்கள்: தென்காசி மாவட்டத்திலிருந்து பல்லாயிரம் டன் கணக்கிலான கனிமவளங்கள் வெட்டி எடுக்கப்பட்டு நூற்றுக்கணக்கான லாரிகள் மூலம் கேரளத்துக்கு தினமும் கொண்டு செல்லப்படுகின்றன.இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்களும், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவா்-மாணவிகளும் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனா். குவாரி மற்றும் லாரி உரிமையாளா்கள் நேரக்கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வலியுறுத்தி கூட்டம் நடத்தப்பட்டு அறிவுறை வழங்கிய பின்பும் முறையாக கடைப்பிடிப்பதில்லை.

கனிமவள லாரிகளை ஒதுக்கப்பட்ட நேரத்தில் லாரியை அனுமதித்தும், கேரளத்தில் இருந்து வரும் காலி லாரிகளையும் குறிப்பிட்ட நேரத்தில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

மனு அளிக்கும்போது, வடக்கு மாவட்ட அதிமுக துணைச் செயலா்பொய்கை சோ. மாரியப்பன் உடனிருந்தாா்.

X
Dinamani
www.dinamani.com