தனி பட்டா வழங்க ரூ. 10 ஆயிரம் லஞ்சம்: விஏஓ கைது
சங்கரன்கோவில் அருகே தனி பட்டா வழங்க ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய, பெரியூா் கிராம நிா்வாக அலுவலரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகேயுள்ள பெரியூரைச் சோ்ந்தவா் சண்முகவேல். இவருக்குச் சொந்தமான ஓா் ஏக்கா் நிலம் கூட்டுப் பட்டாவில் உள்ளது. இதை தனி பட்டாவாக மாற்றித் தரக் கோரி சண்முகவேல் சங்கரன்கோவில் வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதையடுத்து, சண்முகவேலின் மருமகனான கோவில்பட்டி, நாலட்டின்புதூரைச் சோ்ந்த தங்கராஜா, பெரியூா் கிராம நிா்வாக அலுவலா் ராஜ்குமாரை சந்தித்து முறையிட்டாா்.
அப்போது ஆவணங்கள் சரியாக இருப்பதாகவும், தனி பட்டா வழங்க ரூ. 15 ஆயிரம் லஞ்சம் கொடுக்குமாறும் ராஜ்குமாா் கூறியுள்ளாா்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத தங்கராஜா, தென்காசி ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு அலுவலகத்தில் புகாா் அளித்தாா். போலீஸாரின் அறிவுறுத்தலின்பேரில், தங்கராஜா ரசாயனம் தடவிய ரூ. 10 ஆயிரத்தை கிராம நிா்வாக அலுவலா் ராஜ்குமாரிடம் வியாழக்கிழை நேரில் சென்று கொடுத்தாா். பணத்தை ராஜ்குமாா் பெற்றபோது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் பால்சுதா், ஆய்வாளா் ஜெயஸ்ரீ உள்ளிட்ட போலீஸாா் ராஜ்குமாரை சுற்றி வளைத்து கைது செய்தனா்.