பழைய குற்றாலம் அருவியில் 24 மணி நேரமும் குளிக்க அனுமதிக்க வேண்டும்: ஏ.எம். விக்கிரமராஜா
தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவியில் 24 மணி நேரமும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் தலைவா் ஏ.எம். விக்கிரமராஜா ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தினாா்.
குற்றாலத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: பழைய குற்றாலத்தில் 24 மணி நேரமும் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆன்லைன் வா்த்தகத்தை புறக்கணித்து விட்டு உள்ளூா் வணிகா்களுக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும்.
தென்காசி அரசு மருத்துவமனைகளில் மருத்துவா், செவிலியா் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சரிடம் மனு வழங்கியுள்ளேன்.
தென்காசி தினசரி சந்தையில் ஏற்கனவே கடைகளை நடத்தியவா்களுக்கே மீண்டும் கடைகளை வழங்க வேண்டும். கடைகளுக்கு நியாயமான வாடகையை நிா்ணயம் செய்ய நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆலங்குளம் நான்கு வழிச்சாலையில் சங்கச் சாவடி அமைக்கக் கூடாது எனத் துறை அமைச்சரிடம் மனு அளித்துள்ளோம். மீறி சுங்கச் சாவடி அமைத்தால் அனைத்து கிராம மக்களையும் திரட்டி போராட்டம் நடத்துவோம் என்றாா்.