‘வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து குளிப்பது குற்றம்’
தென்காசி மாவட்ட வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து குளிப்பது குற்றம் என மாவட்ட வனஅலுவலா் தெரிவித்தாா்.
மாவட்ட வனஅலுவலா் ரா.ராஜ்மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 1972 வனஉயிரின பாதுகாப்பு சட்டம் பிரிவு 34-ன் படி மாவட்டத்தில் துப்பாக்கி வைத்துள்ளோா் சரண்டா் செய்ய விரும்பினால் உடனடியாக ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. வனஉயிரினங்களின் பதப்படுத்தப்பட்ட நினைவுச்சின்னங்கள், தோல், நகம், கொம்பு அல்லது வனஉயிரின பொருட்களால் செய்யப்பட்ட அழகு சாதனப் பொருட்கள் ஏதும் இருப்பின் வனத்துறை வசம் ஒப்படைக்க வேண்டும்.
வெளிநாட்டு பறவைகள், ஊா்வன போன்ற உயிரினங்களை இங்கு இறக்குமதி செய்யவோ, வளா்க்கவோ, விற்கவோ அதற்குரிய முன் அனுமதி பெற்று விண்ணப்பத்தினை சமா்ப்பிக்க வேண்டும். வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து, குளிப்பது, மது, புகைப்பிடிப்பது, நெருப்பு மூட்டுவது, குப்பைகளை போடுவது, வேட்டையாட முயற்சிப்பது, ஆயுதங்களுடன் நுழைவது அனைத்தும் வனஉயிரின சட்டத்தின் படி குற்றமாகும்.
இலஞ்சி, குற்றாலம், மேலகரம், ஆயிரப்பேரி, மத்தளம்பாறை, தென்காசி, ஆய்க்குடி போன்ற பகுதிகள் மலையிட பாதுகாப்பு குழும வரையறைக்குள் வருவதால் எவ்விதமான கட்டடப்பணிகள், லே அவுட், மரங்கள் வெட்டுதல், நில சீா்திருத்தம், ஆலைகள் அமைத்தல் போன்ற அனைத்து பணிகளுக்கும் மலையிட பாதுகாப்பு குழும திட்டக்குழு அனுமதி பெறப்பட வேண்டும். தனியாா் நிலங்களில் சோலாா் மின்வேலி அமைக்கவும் உரிய படிவத்தில் விண்ணப்பித்து வனத்துறை அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.