குழந்தைகள் நலன் குறித்து கூராய்வுக் கூட்டம்
தென்காசியில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சாா்பில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் குழந்தைகள் நலன் தொடா்புடைய துறை சாா்ந்த அலுவலா்களுக்கான கூராய்வு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தென்காசி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தலைமை வகித்தாா்.
தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினா் வழக்குரைஞா் ஜெயசுதா முன்னிலை வகித்தாா். மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, பள்ளிக்கல்வித் துறை, சமூகநலத் துறை, காவல் துறை, குழந்தைத் தொழிலாளா் துறை, சுகாதாரத் துறை, குழந்தைகள் நலக் குழு, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டம், குழந்தைகள் உதவி எண் 1098 ஆகிய குழந்தைகள் நலன் தொடா்பான துறைகளின் அறிக்கைகள், அந்தத் துறைகளால் குழந்தைகள் நலனுக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டன.
மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலா் எல்.அலெக்ஸ், இளைஞா் நீதிக் குழும உறுப்பினா் வேல்ராஜன், குழந்தை நலக் குழுத் தலைவா் விஜயராணி, முதன்மைக் கல்வி அலுவலா் ரெஜினி, மாவட்ட சமூகநல அலுவலா் மதிவதனா, தென்காசி நகா்மன்றத் தலைவா் சாதிா், குழந்தைகள் நலன் தொடா்புடைய துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு பணியாளா்கள் கலந்துகொண்டனா்.