குற்றாலம் பேரருவியில் 9ஆவது நாளாக குளிக்கத் தடை
தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரருவியில் 9-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டது.
குற்றாலத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டுகிறது.
வெள்ளப்பெருக்கின் காரணமாக அனைத்து அருவிகளிலும் சேதம் ஏற்பட்டுள்ளது. சேதமடைந்த பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பழைய குற்றாலத்தில் சீரமைப்புப் பணிகள் முழுமையாக முடிவடைந்ததும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவா் என வனத்துறையினா் அறிவித்தனா்.
ஐந்தருவியில் தண்ணீா் வரத்து குறைந்ததையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனா். பேரருவியில் தண்ணீா் வரத்து குறையாததால் 9-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் ஐந்தருவி, புலியருவி, சிற்றருவியில் குளித்து மகிழ்ந்தனா்.

