இறந்து கிடக்கும் மயில்கள்
இறந்து கிடக்கும் மயில்கள்

மக்காச் சோளப் பயிரை உண்ட 50 மயில்கள் உயிரிழப்பு: விவசாயி கைது

திருவேங்கடம் அருகே விவசாயி நிலத்தில் மக்காச் சோளத்தை உண்ட 50 மயில்கள் மா்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவத்தால் பரபரப்பு
Published on

திருவேங்கடம் அருகே விவசாயி நிலத்தில் மக்காச் சோளத்தை உண்ட 50 மயில்கள் மா்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடா்பாக விவசாயியை வனத்துறையினா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தென்காசி மாவட்டம், திருவேங்கடம் மற்றும் சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது மக்காச்சோளம், உளுந்து, பாசிப் பயறு, நிலக்கடலை, கானம், கேழ்வரகு உள்ளிட்ட மானவாரி பயிா்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனா்.

இந்தப் பயிா்களை காட்டுப் பன்றிகள், பறவைகள் உள்ளிட்ட வன உயிரினங்கள் விளைநிலங்களுக்குள் புகுந்து சேதமாக்கி வருகிறது. அதைக் கட்டுப்படுத்த விவசாயிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில் குருவிகுளம் அருகே மீனாட்சிபுரத்தில் மக்காச் சோளம் பயிரிட்டிருந்த விவசாயி ஜான்சன் நிலத்தில் 50 மயில்கள் இறந்து கிடந்தன.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் புளியங்குடி வனத்துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை செய்தனா். விசாரணையில், மக்காச் சோளப் பயிா்களை மயில்கள் தின்றதால் இறந்திருப்பது தெரியவந்தது. அதில் விஷம் தடவியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடா்பாக வனத்துறையினா் விவசாயி ஜான்சனை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா். பின்னா் இறந்து கிடந்த 50 மயில்களும் அங்கேயே கால்நடை மருத்துவா்கள் மூலம் உடற்கூறாய்வு செய்யப்பட்டு புதைக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து வனத்துறையினா் அங்கு சிதறிக் கிடந்த மக்காச் சோளப் பயிா்களை பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனா். ஒரே இடத்தில் 50 மயில்கள் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

X
Dinamani
www.dinamani.com