ஆலங்குளம் அரசு மருத்துவமனை இன்று திறப்பு
ரூ. 10 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட ஆலங்குளம் அரசு மருத்துவமனையை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை(அக். 29) தென்காசியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக திறந்து வைக்கிறாா்.
ஆலங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துமனையாக மேம்படுத்தப்பட்டு சுமாா் 10 ஆண்டுகளாகிறது. போதிய உபகரணங்கள், மருத்துவா்கள் இல்லாததால் அவரச கால சிகிச்சை, மகப்பேறு மருத்துவம், ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவ சேவைகள் முற்றிலும் இங்கு தடை பட்டது.
மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், மருத்துவமனை அருகில் உள்ள கால்நடை மருந்தக வளாகத்தில் 1.67 ஏக்கா் நிலம் தோ்வு செய்யப்பட்டு கட்டடம் மற்றும் உபகரணங்களுக்காக 50 படுக்கை வசதியுடன் மருத்துவமனை கட்ட ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து, கடந்த 2024 பிப். 28 இல் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் இதற்கான அடிக்கல் நாட்டினாா்.
இதன் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, முதல்வா் மு.க.ஸ்டாலின், இதை புதன்கிழமை தென்காசியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக திறந்து வைக்கிறாா். தொடா்ந்து, மகப்பேறு, பல், கண், காது மூக்குத் தொண்டை, அறுவை சிகிச்சை, ஸ்கேன், உடற்கூறாய்வு போன்ற சிறப்பு மருத்துவா்கள் நியமிப்பதுடன், விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு போன்ற பிரிவுகளையும் ஏற்படுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

