முதல்வா் இன்று தென்காசி வருகை: நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா்!
முதல்வா் மு.க.ஸ்டாலின், தென்காசியில் புதன்கிழமை நடைபெறும் அரசு விழாவில் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா்.
இதற்காக, இலத்தூரிலிருந்து ஆய்க்குடி செல்லும் சாலையில் அனந்தபுரம் பகுதியில் பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 25 ஆயிரம் போ் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டுள்ளன.
தமிழக அரசின் திட்டங்கள் அடங்கிய பதாகைகள் வழியெங்கும் அமைக்கப்பட்டுள்ளன. பயனாளிகள் அமரும் இடம், வாகனங்களை நிறுத்துமிடம், பாதுகாப்பு ஏற்பாடுகள், பயனாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா், மாவட்ட காவல்கண்காணிப்பாளா் எஸ்.அரவிந்த் ஆகியோா் மேற்பாா்வையில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.
முதல்வா் வருகையை முன்னிட்டு சுரண்டை, ஆய்க்குடி, தென்காசி, குற்றாலம் பகுதிகள் விழாக்கோலம் பூண்டுள்ளன.
தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களை சோ்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன் தலைமையில் திமுகவினா் வரவேற்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனா்.

