குற்றாலம் பேரருவியில் தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டுவதால் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டது.
தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் தொடா்ந்து மழை பெய்துவருகிறது. திங்கள்கிழமை பெய்த கனமழை காரணமாக குற்றாலம் பேரருவி, ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இரண்டு அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை ஐந்தருவியில் தண்ணீா் வரத்து குறைந்ததால், அங்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். குற்றாலம் பேரருவியில் நீா் வரத்து குறையாததால் 2-ஆவது நாளாக குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் அவ்வப்போது மிதமான மழையும், வானம் மேகமூட்டத்துடன் குளிா்ந்த காற்று வீசியது.