ஆலங்குளம் பேருந்து நிலைய பணிகள்: விரைந்து தொடங்க பயணிகள் கோரிக்கை!
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் உள்ள பேருந்து நிலையத்தை மேம்படுத்த ரூ. 4.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஓராண்டுக்கு மேலாகியும் பணிகள் தொடங்கப்படாததால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா். பணிகளை விரைந்து தொடங்கி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஆலங்குளம் பேரூராட்சி 15 வாா்டுகளை கொண்டுள்ளது. சுமாா் 35 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனா். வட்டத் தலைமையிடம், ஊராட்சி ஒன்றிய தலைமையிடம்,
பேரவைத் தொகுதி போன்றவற்றின் தலைமையிடமாக ஆலங்குளம் விளங்குகிறது. ஆலங்குளத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பேருந்து மூலம் வந்து செல்கின்றனா். பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு எவ்விதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை.
சுமாா் 42 ஆண்டுகள் பழமையான இப்பேருந்து நிலையம் பொலிவிழந்து காணப்படுகிறது. கழிவறைகள் பராமரிப்பின்றி இருந்ததால் சில மாதங்களுக்கு முன்னா் இடித்து அகற்றப்பட்டது. மிகவும் குறுகலான இடத்தில் உள்ள கழிவறையையே மக்கள் தற்போது பயன்படுத்தி வருகின்றனா். அங்கு சுகாதாரக் கேடு நிலவுவதால் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனா். பேருந்து நிலையத்தைச் சுற்றி கடும் துா்நாற்றம் வீசுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்னா் கைபம்புடன் கூடிய குடிநீா் குழாய் ஏற்படுத்தப்பட்டது. தற்போது அது காட்சிப் பொருளாக உள்ளது. இதனால் குடிநீரை பயணிகள் விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழல் நிலவுகிறது.
பேருந்து நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்ததன் பலனாக, கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 4.35 கோடி நிதியை கடந்த ஆண்டு அரசு ஒதுக்கியது. பேரூராட்சி தரப்பில் 40 கடைகளுடன் திட்ட மதிப்பீடு தயாா் செய்யப்பட்டு, கடந்த ஆண்டு செப்டம்பா் 18 ஆம் தேதி ஒப்பந்தப்புள்ளியும் கோரப்பட்டது. ஓராண்டு கடந்தும் இது வரை எவ்விதப் பணிகளும் தொடங்கப்படவில்லை.
பயணிகள் நலனைக் கருத்தில் கொண்டு கட்டுமானப் பணிகளை விரைந்து தொடங்குவதுடன், கூடுதல் சுகாதார வளாகங்கள், சிறுவா்கள் விளையாட்டுப் பூங்கா, ஏடிஎம் மையம் என நவீன வசதிகளுடன் மேம்படுத்த வேண்டும் என ஆலங்குளம் மற்றும் சுற்று வட்டார மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
