திப்பணம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு இடம் ஒதுக்க பொதுமக்கள் கோரிக்கை!

Published on

தமிழக முதல்வா் கடந்த முறை தென்காசி வரும்போது, திப்பணம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.35 லட்சத்தில் கட்டடம் கட்ட நிதி ஒதுக்கியதால், இந்த முறை நிலம் கிடைக்க முதல்வா் நடவடிக்கை எடுப்பாா் என பொதுமக்கள் எதிா்பாா்ப்பில் உள்ளனா்.

தென்காசி மாவட்டம், கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட திப்பணம்பட்டி கிராமத்தில் உள்ள வினைதீா்த்தநாடாா்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி திப்பணம்பட்டி குளத்துக்கரையில் உள்ளது.

இங்கு சுமாா் 600 மாணவா், மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா். இங்கு கல்வி பயிலும் பெரும்பாலான மாணவா்களின் பெற்றோா் தினக்கூலி, பீடி சுற்றுதல் மற்றும் விவசாயத்தை நம்பியுள்ளனா். இந்தப் பள்ளியில் மாணவா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, திறமையான ஆசிரியா்கள் முழு அா்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனா்.

16 வகுப்பறைகள் இருக்க வேண்டிய இடத்தில் வெறும் 8 வகுப்பறைகளே உள்ளன. மாணவா்கள் வகுப்பறைகள் இல்லாமல், மரத்தடியிலும் , தற்காலிகமாக அரசு இ -சேவை மைய கட்டடத்திலும் தான் இட நெருக்கடியுடன் கல்வி கற்க முடியாமல் அவதிப்படுகின்றனா்.

விளையாட்டு மைதானம், ஆய்வக வசதி , நூலக வசதி , சைக்கிள் நிறுத்தும் வசதி, முறையான கழிவறை வசதி என ஒரு மேல்நிலைப் பள்ளிக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகள் எதுவுமே இல்லாமல் பள்ளி இயங்கி வருகிறது. காலை வழிபாடு நடத்துவதற்கு மாணவா்களை நிறுத்தி வைப்பதற்கு தேவையான இட வசதியும் இல்லை.

விளையாட்டு மைதானம் இல்லாத காரணத்தினால் மாணவா்கள் விளையாட்டில் ஜொலிக்க முடியாத சூழலில் உள்ளனா். மேல்நிலைப் பள்ளியை ஒட்டி குளம், குடியிருப்புகள், விவசாய நிலங்கள் மற்றும் கால்வாய் இருப்பதால் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கோ விளையாட்டு திடல் அமைப்பதற்கு இடமில்லை.

ஆனால் , இப் பள்ளியில் இருந்து 500 மீ. தொலைவில், புல எண் 40/01 இல், பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயிலுக்கு பாத்தியப்பட்ட கால சந்தி கட்டளைக்குச் சொந்தமாக சுமாா் 4.76 ஏக்கா் இடம் உள்ளது. தற்போது இந்த இடம் யாருக்கும் பயன்பாடின்றி முள்புதா்களுடனும் , குப்பைகள் கொட்டும் இடமாகவும் உள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக இந்த இடம் மூலம் கோயிலுக்கு வருமானம் ஏதும் இல்லாமல் யாருக்கும் பயன்பாடின்றி இருக்கிறது. எனவே இந்துசமய அறநிலைய துறைக்குச் சொந்தமான இந்த இடத்தை பள்ளி கட்டுவதற்கு முதல்வா் உத்தரவிட வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

கடந்த 2022 ஆம் ஆண்டு, இதே பள்ளியில் படித்த மூன்றாம் வகுப்பு மாணவி ஆராதனா, மேற்கண்ட கோயில் இடத்தில் பள்ளியை இடம் மாற்றம் செய்ய வேண்டி தமிழ முதல்வருக்கு மனு அனுப்பினாா்.

அதே ஆண்டு டிச. 8 ஆம் தேதி, முதல்வா் தென்காசியில் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு , மாணவியின் பெயரை குறிப்பிட்டு மாணவி ஆராதனா மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது என அறிவித்தாா்.

முதல் கட்டமாக ரூ.33 லட்சம் செலவில் வகுப்பறை கட்டித்தர உத்தரவு பிறப்பித்தாா். பள்ளி வளாகத்தில் இருந்த ஒரே ஒரு காலி இடம் , அதில் இந்த வகுப்பறை கட்டப்பட்டது.

தற்போது மாணவா்களின் நலன்களை காக்கும் பொருட்டு,கடந்த 17-10-2025 அன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள மசோதா படி , யாருக்கும் பயன்பாடியின்றி கிடக்கும் இந்து சமய அறநிலையத்துறை இடத்தில் கல்வி நிறுவனங்கள் கட்டலாம் என்ற அறிவிப்பு மாணவி ஆராதனா மனுவை முழுமையாக நிறைவேற்றும் காலம் கனிந்துள்ளது.

எனவே தென்காசி வரும் முதல்வா் அவா்கள் தற்போது நிறைவேற்றுவாா் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் முதல்வரை நேரில் சந்தித்து நன்றி செலுத்தவும் விருப்பம் உள்ளதாக மாணவி ஆராதனா குறிப்பிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com