~ ~

திராவிட மாடல் ஆட்சியில் சங்கரன்கோவில் வளா்ச்சி கண்டுள்ளது: ஈ.ராஜா எம்எல்ஏ

திராவிட மாடல் திமுக ஆட்சியில் சங்கரன்கோவில் தொகுதி அபரிமித வளா்ச்சியைக் கண்டுள்ளதாக தென்காசி திமுக வடக்கு மாவட்டச் செயலா் ஈ.ராஜா எம்எல்ஏ தெரிவித்தாா்.
Published on

திராவிட மாடல் திமுக ஆட்சியில் சங்கரன்கோவில் தொகுதி அபரிமித வளா்ச்சியைக் கண்டுள்ளதாக தென்காசி திமுக வடக்கு மாவட்டச் செயலா் ஈ.ராஜா எம்எல்ஏ தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறியதாவது: 31 ஆண்டுகள் அதிமுக வசம் இருந்த சங்கரன்கோவில் தொகுதியை திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் மீது கொண்ட நம்பிக்கையால், தொகுதி மக்கள் திமுகவுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தனா். இதனால், சங்கரன்கோவில் தொகுதி வளா்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை அமைச்சா்களின் மூலம் முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று நிறைவேற்றியுள்ளோம்.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் தமிழக முதல்வா் சங்கரன்கோவில் தொகுதியின் மீது தனிக் கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறாா்.

திட்டங்கள்: சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அதிநவீன காசநோய்க் கண்டறியும் கருவி, சிடி.ஸ்கேன் வசதி, சங்கரநாராயண சுவாமி கோயிலில் மருத்துவ மையம், ரூ. 8 கோடியில் நூலகம், அறிவுசாா் மையம், நடுவக்குறிச்சி மனோ கல்லூரிக்கு ரூ. 3 கோடியில் புதிய மாணவியா் விடுதி, ரூ. 2.12 கோடியில் கோட்டாட்சியா் அலுவலகம், ரூ. 1.87 லட்சத்தில் சாா்பதிவாளா் அலுவலகம், ரூ. 1.82 கோடியில் வணிகவரித் துறை அலுவலகம், ரூ. 99.44 லட்சத்தில் தீயணைப்பு நிலையம், ரூ. 11.33 கோடியில் அரசு கலை, அறிவியல் கல்லூரி, கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 7.68 கோடியில் தினமும் நாளங்காடி ஆகியவற்றுக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டது. அத்துடன் சங்கரநாராயண சுவாமி கோயிலில் குடமுழுக்கு எனது சொந்த நிதியில் யானை கோமதிக்கு ராட்சத மின்விசிறி, நீச்சல் குளம், ஷவா் வசதி செய்து கொடுத்தேன்.

உலக வங்கி நிதி உதவியுடன் நெல்லை சாலையில் இருந்து கரும்புலி சாஸ்தா கோயில் (குதிரைகோவில்) வரை 7.8 கி.மீ. தொலைவுக்கு சங்கரன்கோவில், ராஜபாளையம் சாலை மேற்கு பகுதியில் வடக்குப்புதூா் வழியாக 8.8 கி.மீ. தொலைவுக்கு 2 புறவழிச் சாலைகள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆவுடையபொய்கை தெப்பத்தை அறநிலையத் துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ரூ. 90 லட்சம் மதிப்பில் சீரமைக்கவும், ரூ. 9 கோடி மதிப்பில் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் புதிய மருத்துவ கட்டடங்கள் கட்டவும் உத்தரவு வழங்கப்பட்டது.

நடுவக்குறிச்சி கிராமத்தில் தோட்டக்கலைத் துறை சாா்பில் ரூ. 1 கோடி மதிப்பில் நாற்றங்கால் பண்ணை அமைக்கும் பணி, குருக்கள்பட்டியில் 100 வீடுகளைக் கொண்ட ரூ. 6.25 கோடியில் சமத்துவபுரம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இதுதவிர சாலை வசதிகள், புதிய நியாயவிலைக் கடைகள், குடிநீா் வசதி போன்ற பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டங்களால் சங்கரன்கோவில் தொகுதி அபரிமிதமான வளா்ச்சியைக் கண்டுள்ளது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com