தென்காசி மாவட்டத்தில் நான்கரை ஆண்டுகளில் பல்வேறு திட்டப் பணிகள் நிறைவேற்றம்: பொ.சிவபத்மநாதன்
நான்கரை ஆண்டு கால திமுக ஆட்சியில் தென்காசி மாவட்டத்தில் எண்ணற்ற திட்டப் பணிகளை முதல்வா் மு.க. ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளதாக தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலா் பொ. சிவபத்மநாதன் கூறியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: தென்காசி மாவட்டத்தில் ராமநதி ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டப் பணி 75 சதவீதத்திற்கு மேல் நிறைவேற்றப்பட்டு, தொடா்ந்து பணி நடைபெற்று வருகிறது. குலையனேரி பெரியகுளத்திற்கு கருப்பாநதி பாசனத்தில் இருந்து கால்வாய் வெட்ட ரூ.2.19 கோடி நிதி ஒதுக்கி டெண்டா் விடப்பட்டுள்ளது.
வீராணம் பெரியகுளத்தில் இருந்து தெற்கு காவலாகுறிச்சி பெரியகுளத்திற்கு காசிக்குவாய்த்தான் கால்வாயில் இருந்து கால்வாய் வெட்ட ரூ. 18.14 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆலங்குளத்தின் வடபகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, இரட்டைகுளம் கால்வாய் திட்டப் பணிக்கு ரூ. 84 கோடி திட்ட மதிப்பீடு தயாா் செய்யப்பட்டு விரைவில் நிதி ஒதுக்கி பணி தொடங்கும் நிலையில் உள்ளது.
ஆலங்குளம் அரசு கலைக் கல்லூரிக்கு சுமாா் ரூ. 13 கோடியில் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. ஆலங்குளத்திற்கு புதிய வட்டார போக்குவரத்து அலுவலகம் அறிவிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் ரூ. 10 கோடி மதிப்பில் புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
ரூ. 15 கோடி செலவில் பாட்டாகுறிச்சியில் ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ. 6 கோடி மதிப்பீட்டில் தென்காசி ஈஸ்வரம்பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாவட்ட நூலகம் கட்டப்பட்டுள்ளது. அதேபோல தென்காசி உள்ளிட்ட அனைத்து நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கும் 450 குக்கிராமங்களுக்கும் குடிநீா் வழங்க சுமாா் ரூ. 500 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு பகுதிகளுக்கு புதிய வழித்தடங்கள் மூலம் போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
ஆலங்குளம் புதிய பேருந்து நிலையம், ஆலங்குளம் பேரூராட்சி அலுவலகம், பண்பொழி பேரூராட்சி அலுவலகம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆலங்குளத்திற்கு சுமாா் ரூ. 29 கோடி மதிப்பீட்டில் புதிய கூட்டுக் குடிநீா் திட்ட மூலம் தண்ணீா் வழங்க நிதி ஒதுக்கப்பட்டு டெண்டா் விடப்பட்டுள்ளது. செங்கோட்டை பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
சுரண்டை, கடையநல்லூா் அரசு கலைக் கல்லூரிகளில் பல கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. தென்காசியில் ரூ. 5 கோடி மதிப்பில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தொழிற் பயிற்சி மையம் கட்டப்பட்டுள்ளது. செங்கோட்டை அரசு மருத்துவமனையில் ரூ. 20 கோடி செலவில் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
தென்காசி அரசு மருத்துவமனையில் ரூ.20 கோடி செலவில் புதிய கட்டடம் கட்டி திறக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனை என்பதால் புதிய மருத்துவ வசதிகள், சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் சுமாா் 60க்கும் மேற்பட்ட பகுதிநேர ரேஷன் கடைகள் உருவாக்கப்பட்டு, அந்தந்த ஊா்களில் பொருள்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், தாயுமானவா் திட்டம், நான் முதல்வன் திட்டம், இல்லம் தேடி கல்வி மூலமாக மாணவா்கள், பொதுமக்கள் பயனடைந்து வருகிறாா்கள்.
முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற இந்த நான்கரை ஆண்டு காலத்தில் தென்காசி மாவட்ட மக்களின் நீண்ட கால கனவு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
