சுரண்டை மருத்துவமனையை தரம் உயா்த்த முதல்வரிடம் பொதுமக்கள் கோரிக்கை

சுரண்டை மருத்துவமனையை தரம் உயா்த்த முதல்வரிடம் பொதுமக்கள் கோரிக்கை

பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின்.
Published on

மருத்துவ சிகிச்சைக்கு தென்காசிக்குச் செல்ல வேண்டியுள்ளதால் போதிய மருத்துவா்கள் இன்றி இயங்கும் சுரண்டை ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாகத் தரம் உயா்த்தி தருமாறு சுரண்டை மக்கள் முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்தனா்

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு திட்டப் பணிகளைத் தொடங்கிவைத்து நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வா் மு.க.ஸ்டாலின் தென்காசிக்கு புதன்கிழமை வந்தாா். சுரண்டை வழியாக தென்காசிக்கு அவா் சென்றபோது சிவகுருநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ,மாணவிகள் முதல்வரைக் காண பள்ளி முன் காத்திருந்தனா்.

அப்போது மாணவா்களைக் கண்ட முதல்வா் வாகனத்தை நிறுத்தி பள்ளி மாணவிகளிடம் கலந்துரையாடினாா். நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என அறிவுறுத்தி வாழ்த்தினாா்.

அப்போது அங்கே வந்த சுரண்டை பகுதியைச் சோ்ந்த பெண்கள் தங்க ரதி, பிரேமா ராணி, அழகு சுந்தரி, பேபி, பாப்பா, சின்னத்தாய் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் தமிழக முதல்வரிடம் சுரண்டையில் ஆரம்ப சுகாதார நிலையம் மட்டுமே உள்ளது. போதிய மருத்துவா் இல்லை. நாங்கள் மருத்துவ சிகிச்சைக்காக தென்காசி செல்ல வேண்டியுள்ளது. எனவே, சுரண்டையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக தரம் உயா்த்தி தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனா். அவா்களிடம் கண்டிப்பாக நிறைவேற்றி தருவதாக முதல்வா் உறுதியளித்து கிளம்பிச் சென்றாா்.

X
Dinamani
www.dinamani.com