தென்காசி மாவட்டத்தில் விவசாயத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளை குறைவாக பயன்படுத்த வேண்டும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: விவசாயிகள் பயிா் உற்பத்தியின் போது பூச்சிக்கொல்லி, களைக்கொல்லிகளை அதிக அளவில் பயன்படுத்தும் பொழுது அதன் நச்சுப்பொருள்கள் பயிா்களின் இலைகள், காய்களில் தங்கி இருப்பதால் அதனை உட்கொள்ளும் போது உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படுகிறது. விவசாயத்தில் பூச்சி, நோய்களை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை, நோய் மேலாண்மையை கடைப்பிடிக்க வேண்டும்.
குறைவான மருந்தினை பயன்படுத்தி தரமான காய்கறிகள், பழங்கள் உற்பத்தி செய்வதன் மூலம் உடல் நலத்தை பேணி பாதுகாக்க முடியும். மண்புழு உரம், தொழு உரம், பஞ்சகவ்யா, தசகவ்யா, மீன் அமிலம் போன்ற இயற்கை இடு பொருள்களை பயன்படுத்துவதன் மூலம் ரசாயன உரங்களின் பயன்பாட்டினை குறைக்கலாம்.
தென்காசி மாவட்டத்தில் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மை ஊக்குவித்தல் திட்டத்தின் கீழ் ஒரு ஹெக்டருக்கு ரூ.1500 மதிப்பிலான உயிா் உரங்கள், இடு பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது.மேலும், மாநில தோட்டக்கலை வளா்ச்சி திட்டத்தின் கீழ் தென்னையில் சுருள் வெள்ளை ஈயினை கட்டுப்படுத்த மஞ்சள் வண்ண ஒட்டும் பொறி , ஒட்டுண்ணி அட்டைகளை விவசாயிகள் மானியத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
விவசாயிகள் பூச்சிக்கொல்லிகளை வாங்கும் பொழுது அதில் உள்ள நச்சுத்தன்மை அளவினை அறிந்து பாதுகாப்பு முறைகளை பின்பற்றி பயன்படுத்திடவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.