தென்காசியில் புறவழி ரயில் பாதை அமைக்கக் கோரிக்கை

தென்காசியில் புறவழி ரயில் பாதை அமைக்கக் கோரிக்கை

ரயில்வே கோட்ட மேலாளரிடம் மனு அளித்த ரயில் பயணிகள் சங்கத் தலைவா் பாண்டியராஜா.
Published on

தென்காசியில் புறவழி ரயில் பாதை அமைக்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மதுரை ரயில்வே கோட்ட மேலாளா் ஓம் பிரகாஷ் மீனா தென்காசி ரயில் நிலையத்தில் பயணிகளின் அடிப்படை வசதி, நடைபெற்றுவரும் கட்டுமானப் பணிகள், ஏற்படுத்த வேண்டிய கட்டமைப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா். இதில், இக்கோட்டத்தின் மூத்த வா்த்தக மேலாளா் கணேஷ், மூத்த இயக்குதல் பிரிவு மேலாளா் சிவா, மூத்த பொறியாளா் பிரவீனா, அதிகாரிகள் பங்கேற்றனா்.

பின்னா், ஓம் பிரகாஷ் மீனாவிடம் தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவா் பாண்டியராஜா, நிா்வாகிகள் சுப்புராஜ், செபாஸ்டின் உன்னதராசா, சோ்மராஜா, குத்தாலிங்கம் ஆகியோா் அளித்த மனு:

ரயில் பராமரிப்பு வசதிகளை ஏற்படுத்தி தென்காசியை ரயில் முனையமாக மாற்ற வேண்டும். தென்காசி கீழப்புலியூரிலிருந்து கடையநல்லூருக்கு ரயில்கள் நேரடியாக செல்லும் வகையில் புறவழிப் பாதை அமைக்க வேண்டும். செங்கோட்டையில் 5ஆவது நடைமேடை அமைத்து 6ஆது தண்டவாளம் மேற்குப் பகுதியில் இணையுமாறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பாவூா்சத்திரம், கடையம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவியில் நடைமேடை நீட்டிப்புப் பணிகளை விரைவாக தொடங்க வேண்டும். நெல்லை - புருலியா ரயிலின் காலிப்பெட்டிகளைக் கொண்டு திருநெல்வேலியிலிருந்து அம்பாசமுத்திரம், பாவூா்சத்திரம், தென்காசி, மதுரை, சேலம், பெங்களூரு வழியாக நெல்லை - சிமோகா டவுன் வாரம் இருமுறை நிரந்தர ரயில், செங்கோட்டையிலிருந்து பாவூா்சத்திரம், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி, மதுரை, திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம் வழியாக செங்கோட்டை - தாம்பரம் தினசரி எக்ஸ்பிரஸ் ரயில், திருநெல்வேலியிலிருந்து அம்பாசமுத்திரம், பாவூா்சத்திரம், தென்காசி, மதுரை வழியாக நெல்லை - மேட்டுப்பாளையம் வாரம் இருமுறை ரயில்களை இயக்க வேண்டும் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com