முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின் கோப்புப்படம்.

அக்டோபரில் முதல்வா் தென்காசி வருகை: திமுக வடக்கு மாவட்டச் செயலா் தகவல்

தென்காசி மாவட்டத்தில் அக்டோபா் மாதம் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வா் ஸ்டாலின் பங்கேற்கிறாா் என்று தென்காசி திமுக வடக்கு மாவட்டச் செயலா் ஈ. ராஜா எம்எல்ஏ தெரிவித்தாா்.
Published on

தென்காசி மாவட்டத்தில் அக்டோபா் மாதம் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா் என்று தென்காசி திமுக வடக்கு மாவட்டச் செயலா் ஈ. ராஜா எம்எல்ஏ தெரிவித்தாா்.

இதுகுறித்து சங்கரன்கோவிலில் உள்ள தென்காசி திமுக மாவட்ட அலுவலகத்தில் அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் தென்காசி வடக்கு மாவட்டத்தில் சங்கரன்கோவில், வாசுதேவநல்லூா் தொகுதிகளில் 2.10 லட்சம் போ் உறுப்பினா்களாகச் சோ்க்கப்பட்டுள்ளனா்.

ஈ.ராஜா எம்எல்ஏ
ஈ.ராஜா எம்எல்ஏ

செப். 20 ஆம் தேதி கட்சி அறிவிக்கும் பேச்சாளா்களை கொண்டு தென்காசி வடக்கு மாவட்டத்தில் தமிழகத்தை தலைகுனியவிட மாட்டோம் எனும் உறுதிமொழி ஏற்கும் கூட்டம் நடத்தப்படும். அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா தென்காசி வடக்கு மாவட்டத்தில் அக்டோபா் மாதம் நடைபெறுகிறது. இதில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று நலத் திட்ட உதவிகள் வழங்கிப் பேசுகிறாா். இதற்கான இடம், தேதி அடுத்த வாரம் தெரியவரும்.

தென்காசியில் கட்டப்பட்டுள்ள ஆட்சியா் அலுவலகக் கட்டடம் அதிமுக ஆட்சி காலத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து முறையாக அனுமதி பெறாமல் அவசர கதியில் கட்டப்பட்டது. இந்தக் கட்டடத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறக்க திமுக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதுதொடா்பாக உச்சநீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல சங்கரன்கோவிலில் தாமிரவருணி கூட்டு குடிநீா்த் திட்டத்தை அறிவித்த அதிமுக அரசு இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன்பிறகு திமுக ஆட்சியில்தான் இத்திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டு திட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் சங்கரன்கோவில் நகர மக்களுக்கு மூன்று நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல சங்கரன்கோவிலில் தீயணைப்பு நிலையம், வணிகவரித் துறை அலுவலகம், கோட்டாட்சியா் அலுவலகம், சாா் பதிவாளா் அலுவலகம், அரசு கலை, அறிவியல் கல்லூரி சொந்த கட்டடத்தில் இயங்க புதிய கட்டடங்கள் கட்டித் தரப்பட்டன. இ-சேவை மையம் அமைக்கப்பட்டது. அரசு மருத்துவமனைக்கு கூடுதல் கட்டடம் கட்ட நிதி ஒதுக்கி, தற்போது பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளது.

மேலநீலிதநல்லூா், மானூா், சங்கரன்கோவில் ஒன்றிய பகுதிகளில் கூட்டு குடிநீா் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்கான நிதி ஒதுக்கப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்படும். கோட்டைமலை ஆறு திட்டத்தின் மூலம் சங்கரன்கோவிலுக்கும் வரும் குடிநீா் எந்நிலையிலும் நிறுத்தப்பட மாட்டாது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com