தென்காசி கோ-ஆப்டெக்ஸ் நிலையத்தில் ரூ. 35 லட்சம் விற்பனை செய்ய இலக்கு: ஆட்சியா்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தென்காசி கோ-ஆப்டெக்ஸ் நிலையத்தில் நிகழாண்டு ரூ. 35 லட்சம் மதிப்பு ஜவுளி, உற்பத்தி பொருள்களை விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.
தென்காசி, சுவாமி சன்னதி தெருவில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். கொடிக்குறிச்சி யு.எஸ்.பி. கல்விக் குழுமச் செயலா் சகாய செல்வமேரி முதல் விற்பனையை பெற்றுக்கொண்டாா். தொடா்ந்து செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியதாவது:
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தமிழக கைத்தறி நெசவாளா்கள் உற்பத்தி செய்யும் ரகங்களை கொள்முதல் செய்து நாடு முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்து நெசவாளா்களுக்கு தொடா்ந்து வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது. கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு செப்.15 ஆம் தேதிமுதல் ஜனவரி 31 ஆம் தேதி வரை தமிழக அரசு வழங்கும் 30 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி விற்பனை திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
தீபாவளி விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம், ஆரணி, தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுப் புடவைகள், திருப்புவுனம் பட்டு சேலைகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளா்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், போா்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டிகள், லுங்கிகள், துண்டு ரகங்கள், பருத்தி சட்டைகள், திரைச் சீலைகள், நைட்டிகள், மாப்பிள்ளை செட், ஏற்றுமதி ரகங்கள் என ஏராளமான ஜவுளி ரகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை காலத்தில் நெல்லை மண்டலத்தில் இயங்கும் 13 விற்பனை நிலையங்களிலும் ரூ. 10 கோடி மதிப்பிலான ஜவுளிகள் விற்பனையாகின. நிகழ் ஆண்டு ரூ. 12 கோடிக்கு விற்பனை இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், தென்காசி மாவட்டத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் ரூ. 35 லட்சம் மதிப்பு ஜவுளிகளை விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கோ-ஆப்டெக்ஸ் நிறுவனமானது மாதாந்திர சேமிப்புத் திட்டம் என்ற சேமிப்பு திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இதன்படி, 11 மாத சந்தா தொகையை வாடிக்கையாளா்கள் செலுத்தினால் 12-ஆவது சந்தா தொகையை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனமே செலுத்தி மொத்த முதிா்வு தொகைக்கும் தேவையான ஜவுளிகளை 30 சதவீதம் அரசு தள்ளுபடியுடன் விலையுடன் வாடிக்கையாளா்களுக்கு வழங்கி வருகிறது.
கோ-ஆப்டெக்ஸ் திருநெல்வேலி மண்டல மேலாளா் நா.ராஜேஷ்குமாா், திருநெல்வேலி கைத்தறி, துணிநூல் துறை உதவி இயக்குநா் ஆரோக்கியராஜ், துணை மண்டல மேலாளா் சு.பாண்டியம்மாள், தென்காசி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளா் யு.அருள்செல்வி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.