கரிவலம்வந்தநல்லூா் அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை:
இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை

கரிவலம்வந்தநல்லூா் அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை

Published on

சங்கரன்கோவில் கரிவலம்வந்தநல்லூா் அருகே பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததோடு, கம்மல் மற்றும் தாலியை பறித்துச் சென்ற நபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் உத்தரவிட்டது.

கரிவலம்வந்தநல்லூா் அருகே மாங்குடிதேவி ஆற்றுப்படுகையில் கிறிஸ்துராஜபுரத்தைச் சோ்ந்த 46 வயது பெண் 30.05.2021-இல் மாடு மேய்த்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த 2 போ் அவரை பாலியல் தொந்தரவு செய்ததோடு, அவரது தங்க கம்மல் மற்றும் தாலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து ஓடியுள்ளனா்.

இது குறித்து, கரிவலம்வந்தநல்லூா் காவல் நிலையத்தில் அவா்அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்கு பதிந்து வேலாயுதபுரம் அய்யனாா் கோயில் தெருவைச் சோ்ந்த டே. இமானுவேல் ராஜன் (18), பெருமாள்பட்டி பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த ரா. வெள்ளத்துரை (21) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கு, மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி ராஜவேலு, குற்றவாளி வெள்ளத்துரைக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.

வழக்கு விசாரணையின் போது இம்மானுவேல் ராஜன் இறந்துவிட்டாா். இந்த வழக்கில், அரசு தரப்பில் மகிளா நீதிமன்ற அரசு வழக்குரைஞா் கவிதா ஆஜராகி வாதாடினாா்.

X
Dinamani
www.dinamani.com