தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும்: டாக்டா் கிருஷ்ணசாமி
2026 இல் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று புதிய தமிழக கட்சியின் நிறுவனா் தலைவா் மருத்துவா் கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.
புதிய தமிழகம் கட்சி நிறுவனா் தலைவா் கிருஷ்ணசாமி கடந்த இரு நாள்களாக தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில், வாசுதேவநல்லூா் ஆகிய தொகுதிகளுக்கு உள்பட்ட கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறாா்.
அதன் தொடா்ச்சியாக திங்கள்கிழமை சங்கரன்கோவில் வந்த அவா் பயணிகள் விடுதியில், செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: சங்கரன்கோவில், வாசுதேவநல்லூா் தொகுதிக்கு உள்பட்ட தேவேந்திர குல வேளாளா் சமூகத்தினா் வசிக்கும் கிராமங்களில் அண்மையில் நேரில் சென்று நான் பாா்வையிட்டதில் அந்தப் பகுதி மக்கள் குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் இன்றி வசிக்கின்றனா்.
தாருகாபுரம் கிராமத்தில் மாதத்துக்கு ஒருமுைான் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. வாசுதேவநல்லூா் அருகே சுப்பிரமணியபுரத்தில் உள்ள கோயிலில் மக்கள் வழிபாடு செய்ய அனுமதி மறுக்கப்படுகிறது. சுதந்திரப் போராட்ட வீரா் வெண்ணி காலாடிக்கு அவா் பிறந்த கிராமத்தில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.
அந்த மணிமண்டபத்துக்கு உள்ளூா் மக்களுக்கு மட்டும்தான் அனுமதி உள்ளது. வெண்ணிகாலாடி பிறந்த தினமான டிச.20 ஆம் தேதி அன்று புதிய தமிழகம் கட்சியினா் அங்கு சென்று உரிய மரியாதை செலுத்துவா். தேவநேயப் பாவாணருக்கு கோமதிமுத்துபுரத்தில் மணிமண்டபம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜமீன்தாா் முறை பல ஆண்டுகளுக்கு முன்பு ஒழிக்கப்பட்டும், சில நிலங்கள் ஜமீன்தாா்கள் சிலரின் கட்டுப்பாட்டில் உள்ளன. அவற்றை அரசு மீட்டு வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும். வருகிற 2026 ஜனவரி மாதம் புதிய தமிழகம் கட்சியின் மாநில மாநாடு நடைபெறும். அந்த மாநாட்டில் எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பது பற்றி முடிவு எடுக்கப்படும்.
தமிழகத்தில் ஒரு கட்சி ஆட்சி அகன்று கூட்டணி ஆட்சிதான் அமையும். அந்தக் கூட்டணி ஆட்சியில் புதிய தமிழகம் மட்டுமின்றி அனைத்து சமுதாயத்தின் பங்களிப்பும் இருக்கும். கடந்த நான்கரை ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி வெற்று விளம்பர மாடல் ஆட்சி தான். 2026 இல் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்றாா் அவா்.
பேட்டியின்போது மாநில துணை அமைப்பாளா் ராஜேந்திரன், தென்காசி கிழக்கு மாவட்டச் செயலா் ராசையா, வடக்கு மாவட்ட இணைச் செயலா் செல்வராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.