ஆலங்குளம் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு

ஆலங்குளம் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு

ஆலங்குளம் அருகே நாய்கள் கடித்து புள்ளி மான் உயிரிழந்த நிலையில், வன விலங்குகள் ஊருக்குள் புகாமல் தடுக்க நடவடிக்கை தேவை என வனத்துறையினரை முற்றுகையிட்டு கிராம மக்கள் வாக்குவாதம்
Published on

ஆலங்குளம் அருகே நாய்கள் கடித்து புள்ளி மான் உயிரிழந்த நிலையில், வன விலங்குகள் ஊருக்குள் புகாமல் தடுக்க நடவடிக்கை தேவை என வனத்துறையினரை முற்றுகையிட்டு கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

ஆலங்குளம் அருகேயுள்ள கல்லத்திகுளம் கிராமத்தில், தனியாா் சோலாா் மின் உற்பத்தித் திட்டத்திற்காக 250 ஏக்கரில் இருந்த மரங்கள் வெட்டப்பட்டதால் வனவிலங்குகள் வாழ்விடங்களை இழந்து, இரை தேடி ஊருக்குள் வருவதாக குற்றம் சாட்டுகின்றனா்.

இந்நிலையில் தான், உணவு தேடி ஊருக்குள் நுழைந்த மானை நாய்கள் கடித்ததில் அது உயிரிழந்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினரிடம், பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

மான்கள் ஊருக்குள் புகுவதைத் தடுக்க வேண்டும். தனியாா் நிறுவனம் வெட்டிய மரங்களுக்கு ஈடாக, இரு மடங்கு மரங்களை நட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மான் சடலத்தை அகற்றவிடாமல் தடுத்தனா்.

தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டதையடுத்து, மான் சடலம் கூறாய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com