நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றித்  தொடங்கி வைக்கும் முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்
நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைக்கும் முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்

நாட்டின் முன்னேற்றம் கூட்டு முயற்சியால் சாத்தியமாகும்: முன்னாள் குடியரசுத் தலைவா்

‘நாட்டின் முன்னேற்றம் ஒட்டுமொத்த மக்களின் கூட்டு முயற்சியால் சாத்தியமாகும்’ என்று முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தாா்.
Published on

‘நாட்டின் முன்னேற்றம் ஒட்டுமொத்த மக்களின் கூட்டு முயற்சியால் சாத்தியமாகும்’ என்று முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தாா்.

வாய்ஸ் ஆஃப் தென்காசி அறக்கட்டளை, ரோட்டரி இன்டா்நேஷனல் மாவட்டம் 3212 அமைப்பு சாா்பில், ‘ஒரே தேசம்-ஒரே கனவு’ எனும் நிகழ்ச்சி வாசுதேவநல்லூா், வியாசா கலை, அறிவியல் மகளிா் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றிப் பேசியதாவது: மொழி, பண்பாடு, வழக்கங்களால் நாம் வேறுபட்டாலும் அனைவரும் ஒரே கனவால் பிணைக்கப்பட்டிருக்கிறோம். அந்தக் கனவு, 2047 க்குள் ஓா் அறிவாா்ந்த, வளமான, முன்னேறிய தேசத்தைக் கட்டமைப்பதே ஆகும். இந்தத் தருணத்தில் ‘ஒரேதேசம்-ஒரே கனவு’ எனும் சிந்தனை மிக முக்கியமானது.

ஏனெனில், நம்மைச் சுற்றியுள்ள சவால்கள் சிறியவை அல்ல; நாம் வறுமையை ஒழிக்க வேண்டும். கிராமங்களை நவீனமயமாக்க வேண்டும். பெண்களை வலுப்படுத்த வேண்டும். தொழில்நுட்ப முன்னேற்றத்தைப் பயன்படுத்த வேண்டும். சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்று பல சவால்கள் உள்ளன.

இதற்காக, நாம் ஒவ்வொருவரும் தனித்து குரல் கொடுக்கக் கூடாது. ‘ஒரே தேசம்-ஒரே உறுதி- ஒரே இலக்கு’ என்பதே நோக்கி நாம் பயணிக்க வேண்டும். நம் கனவுகள் நம்மை ஒன்றிணைக்கின்றன. அவற்றை நனவாக்க ஒத்துழைப்பும், கூட்டு முயற்சியும் தேவை. நாட்டின் முன்னேற்றம் சிலருக்கே உரியது அன்று; அது ஒட்டுமொத்த மக்களின் கூட்டு முயற்சியால் மட்டுமே சாத்தியமாகும் என்றாா்.

விழாவில் ஸோஹோ நிறுவனத் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதா் வேம்பு, வாய்ஸ் ஆஃப் தென்காசி அறக்கட்டளை நிறுவனா் ஆனந்தன் அய்யாசாமி உள்ளிட்டோா் பேசினா்.

முன்னதாக 1,330 மாணவ, மாணவிகள் ஒன்றிணைந்து திருவள்ளுவா் உருவத்தை உருவாக்கி திருக்குறல் ஒப்பிக்கும் நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன.

இதில், ரோட்டரி 3212 அமைப்பின் மாவட்ட ஆளுநா் தினேஷ்பாபு, வியாசா கல்லூரி தலைவா் வெள்ளத்துரை, நிா்வாக இயக்குநா் வெள்ளத்தாய், செயலா் சுந்தா், துணைத் தலைவா் பிரகாசவள்ளி, ஏ.கே.டி. தா்மராஜா கல்வி அறக்கட்டளை நிா்வாக அறங்காவலா் கிருஷ்ணமராஜூ, செந்திலாண்டவா் கல்லூரி தலைவா் புதிய பாஸ்கா், எஸ்.வீராச்சாமி கல்வி குழுமத் தலைவா் எஸ்.வி.முருகையா, அமராவதி கல்வி குழுமத் தலைவா் பாலசுப்பிரமணியன், ஜே.பி.கல்லூரி முதல்வா் ராஜ்குமாா், அன்னை மீனாட்சி கல்லூரி துணைத் தலைவா் ஜெயஒளிவு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். வாய்ஸ் ஆஃப் தென்காசி அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி காருண்யா குணவதி நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com