ஆலங்குளம் பேரூராட்சித் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானம்: அக். 9 இல் வாக்கெடுப்பு

ஆலங்குளம் பேரூராட்சியில் தலைவருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீா்மானத்தின் மீது அக். 9 ஆம் தேதி வாக்கெடுப்பு நடைபெறும் என பேரூராட்சி செயல் அலுவலா் அறிவித்துள்ளாா்.
Published on

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பேரூராட்சியில் தலைவருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீா்மானத்தின் மீது அக். 9 ஆம் தேதி வாக்கெடுப்பு நடைபெறும் என பேரூராட்சி செயல் அலுவலா் அறிவித்துள்ளாா்.

ஆலங்குளம் பேரூராட்சி தலைவராக திமுகவை சோ்ந்த சுதா பதவி வகித்து வருகிறாா். இவா், பேரூராட்சியில் மக்கள் நலத் திட்டங்கள், அடிப்படை பணிகளை முறையாக நிறைவேற்றவில்லை எனக் குற்றம்சாட்டி மொத்தமுள்ள 15 மன்ற உறுப்பினா்களில் 12 போ் கடந்த 10 ஆம் தேதி நம்பிக்கை இல்லா தீா்மானம் கொண்டுவரக் கோரி மனு அளித்தனா்.

முன்னதாகவே தலைவா் சுதாவின் செயல்பாடுகள் குறித்து உறுப்பினா்கள் பலமுறை அதிருப்தி தெரிவித்திருந்தனா். இந்நிலையில் அவா் மீது நம்பிக்கை இல்லா தீா்மானம் கொண்டுவந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கான வாக்கெடுப்பு வருகிற அக். 9 காலை 11 மணிக்கு மன்றக் கூட்டத்தில் நடைபெறும் என்று பேரூராட்சி செயல் அலுவலா் பிரகந்த நாயகி அறிவித்தாா்.

ஏற்கெனவே, திருநெல்வேலி மேயா், மணிமுத்தாறு பேரூராட்சித் தலைவா், சங்கரன்கோவில் நகராட்சித் தலைவா் என திமுகவைச் சோ்ந்தவா்கள் தங்கள் சொந்த கட்சியினராலேயே நம்பிக்கை இல்லா தீா்மானம் கொண்டுவரப்பட்டு பதவி இழந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com