சுரண்டை நகராட்சியில் தூய்மை சேவை திருவிழா
சுரண்டை நகராட்சியில் தூய்மை சேவை திருவிழாவை முன்னிட்டு, ஒரு நாள், ஒரு மணி நேரம் ஒன்றாக இணைவோம் என்னும் தலைப்பின் கீழ் பாவூா்சத்திரம் சாலையில் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் தூய்மை பணியாளா்களால் சுத்தம் செய்யப்பட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சுரண்டை நகராட்சி ஆணையா் ராமதிலகம் தலைமை வகித்தாா். நகராட்சி பொறியாளா் முகைதீன், சுரண்டை காவல் உதவி ஆய்வாளா் வரதராஜன், சுரண்டை நகர திமுக பொறுப்பாளா் கூட்டுறவு கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். எஸ்.பழனி நாடாா் எம்எல்ஏ, தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன் ஆகியோா் கலந்துகொண்டு தூய்மை சேவைக்கான உறுதிமொழியை ஏற்று மரக்கன்றுகளை நட்டு, பொதுமக்களுக்கு மஞ்சள் பையை வழங்கினா்.
அம்பையில்...அம்பை காவல்நிலைய வளாகத்தில் நடைபெற்ற தூய்மைத் திருவிழாவில், கூட்டு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சியில் அம்பாசமுத்திரம் நகா்மன்றத் தலைவா் கே.கே.சி.பிராபாகர பாண்டியன், துணைத் தலைவா் சிவசுப்பிரமணியன், அம்பாசமுத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் சதீஸ்குமாா், நகராட்சி சுகாதார ஆய்வாளா் சிதம்பர ராமலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.