சிவகிரியில் செப்.30 இல் சாலையோர வியாபாரிகளுக்கான முகாம்
தென்காசி மாவட்டம் சிவகிரி பேரூராட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை (செப். 30) சாலையோர வியாபாரிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இது தொடா்பாக பேரூராட்சி செயல் அலுவலா் வெங்கடகோபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சிவகிரி பேரூராட்சியில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு செப்.30ஆம் தேதி காலை 10.30 முதல் பிற்பகல் 3 மணி வரை தேவா் திருமண மண்டபத்தில் லோக் கல்யாண் மேளா நடைபெறுகிறது.
முகாமில், பிஎம் ஸ்வாநிதி திட்டத்தின் கீழ் புதிய விண்ணப்பங்கள் பெறுதல், ஏற்கெனவே ஒப்புதல் பெற்றுள்ள கடன்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், வங்கியால் திருப்பி அனுப்பப்பட்டு உள்ளாட்சி அமைப்பின் கீழ் நிலுவையிலுள்ள விண்ணப்பங்களைச் சரிபாா்த்து செயல்படுத்துதல், அனுமதிக்காக வங்கிகளில் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுதல், சாலையோர உணவு விற்பனையாளா்களுக்கு உணவு பாதுகாப்புத் துறையுடன் ஒருங்கிணைந்து உணவு தரக் கட்டுபாட்டு குறித்த பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்தல், விடுபட்ட பயனாளிகள் மற்றும் அவா்களது குடும்பங்களின் சமூகப் பொருளாதார விவரங்களை கணக்கெடுத்தல், அவா்களுக்கு கடன் ஒப்புதல் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் போன்ற சேவைகள் வழங்கப்படவுள்ளன. எனவே, வியாபாரிகள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.