தென்காசி, திருவண்ணாமலை வழியாக நெல்லை - திருப்பதி வாராந்திர சிறப்பு ரயில் இயக்கக் கோரிக்கை

Published on

நெல்லையில் இருந்து பாவூா்சத்திரம், தென்காசி, மதுரை, திருச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை வழியாக திருப்பதிக்கு வாராந்திர ரயில் இயக்க வேண்டும் என பயணிகள் எதிா்பாா்க்கின்றனா்.

தென்காசி வழியாக பல்வேறு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஆா்வம் காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக தென்காசி வழியாக கோவைக்கும் பெங்களூருவுக்கும் வாராந்திர சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது.

தென்காசி வழியாக நெல்லை-மேட்டுப்பாளையம், நெல்லை-பெங்களூருவுக்கு ஞாயிற்றுக்கிழமைதோறும் இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சிறப்பு ரயில்களை நிரந்தர ரயில்களாக இயக்க வேண்டும் என்ற பயணிகளின் கோரிக்கையும் வலுத்து வருகிறது.

இதேபோல தென்காசியில் இருந்து திருவண்ணாமலைக்கும், திருப்பதிக்கு இதுவரை நேரடி ரயில்கள் இல்லை. ஆயிரக்கணக்கான பக்தா்கள் இந்த ஆன்மிக தலங்களுக்குச் சென்று வரும் வகையில், நெல்லையிலிருந்து தென்காசி, மதுரை, திருச்சி, விருத்தாச்சலம், திருவண்ணாமலை வழியாக திருப்பதிக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ரயில் பணிகள் சங்கத் தலைவா் பாண்டியராஜா கூறியது:

தென்காசி, திருவண்ணாமலை வழியாக திருப்பதிக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட வேண்டும். இந்த ரயில் நெல்லையப்பா் கோயில், பாபநாசம் கோயில், தென்காசி காசி விஸ்வநாதா் கோயில், சங்கரநாராயணா் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில், சிவகாசி திருத்தலம், திருப்பரங்குன்றம், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருச்சி ஸ்ரீரங்கம் கோயில், விருத்தாச்சலம் விருதகிரீஸ்வரா் கோயில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் என பல்வேறு பிரதான கோயில்கள் உள்ள வழித்தடத்தின் வழியாக திருப்பதிக்குச் செல்லும் என்பதால் பயணிகளிடையே கூடுதல் வரவேற்பு கிடைக்கும்.

நெல்லையில் 3 நாள்கள் காலியாக நிறுத்தப்பட்டிருக்கும் நெல்லை புருஸ்லியா ரயிலின் பெட்டி தொடா்களை பயன்படுத்தி ஒவ்வொரு புதன்கிழமையும் நெல்லையில் புறப்பட்டு மறுநாள் காலை திருப்பதியை சென்றடையும் வகையிலும், ஒவ்வொரு வியாழக்கிழமையும் திருப்பதியில் இருந்து திருவண்ணாமலை தென்காசி வழியாக நெல்லை வரும் வகையிலும் இந்த வாராந்திர சிறப்பு ரயிலை இயக்கிடலாம்.

இவ்வாறு இயக்கும்பட்சத்தில் பல்வேறு ஆன்மிக சுற்றுலாத் தலங்களை இணைக்க கூடிய மிக முக்கிய ரயிலாக இந்த ரயில் விளங்கும். இதுகுறித்து தென்னக ரயில்வே பொது மேலாளருக்கும் மனு அனுப்பியுள்ளோம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com