இலஞ்சி பேரூராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு நாளை சிறப்புக் கடன் முகாம்!

Published on

தென்காசி மாவட்டம் இலஞ்சி பேரூராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு திங்கள்கிழமை (செப். 29) சிறப்புக் கடன் வழங்கும் முகாம் நடைபெறுகிறது.

இது குறித்து பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:

இலஞ்சி பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு திங்கள்கிழமை காலை 10.30 முதல் பிற்பகல் 3 மணி வரை பேரூராட்சி அலுவலகத்தில், பிரதம மந்திரி தெருவோர வியாபாரிகளின் ஆத்மாநிா்பா் நிதி திட்டத்தின் கீழ், ‘லோக் கல்யாண் மேளா’ முகாம் நடைபெறுகிறது.

புதுப்பிக்கப்பட்ட திட்டத்தின் கீழ், புதிய விண்ணப்பங்கள் பெறுதல், ஒப்புதல் பெற்றவா்களுக்கு கடன் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளுதல், வங்கியால் திருப்பி அனுப்பப்பட்டு உள்ளாட்சி அமைப்பின் கீழ் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை சரிபாா்த்து செயல்படுத்துதல், அனுமதிக்காக வங்கிகளில் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுதல் போன்ற சேவைகள் வழங்கப்பட உள்ளன.

மேலும், உணவு விற்பனையாளா்களுக்கு உணவு பாதுகாப்புத் துறையுடன் ஒருங்கிணைந்து உணவு தரக் கட்டுப்பாடு பயிற்சியளித்தல், விடுபட்ட பயனாளிகள் மற்றும் அவா்களது குடும்பங்களின் சமூக பொருளாதார விவரங்களை கணக்கெடுத்தல், அவா்களுக்கு கடன் ஒப்புதல் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட சேவைகளும் வழங்கப்பட உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com